இந்தியாவில் ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் எளிதாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களை போலியான திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகிறார்கள். சமீபத்தில் பங்குச்சந்தை குறித்த யூடியூப் விளம்பரத்தைக் கிளிக் செய்து மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ரூ.76.5 லட்சத்தை இழந்துள்ளார்
பாதிக்கப்பட்டவர், அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் யூடியூபில் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தைப் பார்த்து லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அதன் மூலம் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். அந்தக் குழுவில் அனுபவம் வாய்ந்த சந்தை நிபுணர்களிடமிருந்து வர்த்தகத்தைக் கற்றுக்கொள்ளலாம் என நம்பியுள்ளார்.
digital arrest cyber crime kozhikode native lost 1.5 crore money
ஆரம்ப நாட்களில், வாட்ஸ்அப் குழு மருத்துவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தின் அடிப்படைகள் குறித்து கொஞ்சம் அறிமுகப்படுத்தியது. இதனால் டாக்டரும் குழுவைப் பற்றி மேலும் நம்பிக்கை கொண்டார். அந்தக் குழு "திவாகர் சிங்" என்ற ஒருவரால் நிர்வகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளுக்கான வர்த்தக குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடிக்கடி குழுவில் பகிர்பவர்.
டாக்டர் குழுவின்போது நம்பிக்கை வைத்து முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிவு செய்தார். அப்போது மோசடி கும்பல் அவரை பங்கு வர்த்தகத்திற்காகக் ஒரு ஆன்லைன் தளத்தில் கணக்கைத் திறக்க வற்புறுத்தியுள்ளது. சில பங்குகள் மற்றும் ஐபிஓக்களை பரிந்துரைத்து, இவற்றில் முதலீடு செய்தால் 30 சதவீத லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.
இதை நம்பிய டாக்டர் மூன்று வாரங்களுக்குள் கிட்டத்தட்ட ரூ.76.5 லட்சத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார். அக்டோபர் 22ஆம் தேதி, தனது கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுக்க முயன்றபோது, அந்தப் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது. அப்போதுதான் டாக்டருக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்தது. உடனே உள்ளூர் அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
Cyber crime
சமீபத்திய மாதங்களில், இதுபோன்ற போலியான பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்களுக்கு பலியாகி பணத்தைப் பறிகொடுத்த வழக்குகள் பல பதிவாகியுள்ளன. மோசடி செய்பவர்கள் எளிதில் லாபம் பெற முயலும் நபர்களைச் சுரண்டுகிறார்கள்.
எனவே விரைவாக அதிக லாபம் பெறலாம் என உறுதியளிக்கும் ஆன்லைன் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை மற்றும் சைபர் பிரிவு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, சந்தேகத்துக்குரிய லிங்க் எதையும் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.