மாத சம்பளத்தில் பெரிய பகுதி இஎம்ஐ-களுக்கே செலவாகி விடுகிறது. சிலருக்கு ஒரே நேரத்தில் 5 அல்லது 6 இஎம்ஐ கூட இருக்கலாம். இதனால் சேமிப்பு செய்ய முடியாமல் போகிறது. எதிர்பாராத மருத்துவ செலவு, குடும்ப அவசரம், குழந்தைகளின் கல்வி செலவுகள் வந்தால் உடனே சமாளிப்பது கடினமாகிறது. “எல்லா இஎம்ஐ-யும் ஒன்றாக சேர்த்து ஒரே தவணையாக கட்டினால் நிம்மதி கிடைக்கும்” என்று பலரும் நினைப்பது இயல்பே.
இந்த இஎம்ஐ சுமைக்கு தீர்வாக சவுத் இந்தியன் வங்கி புதிய கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘பவர் கன்சோல்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பல்வேறு கடன்களாக இருக்கும் இஎம்ஐ-களை ஒரே கடனாக இணைத்து குறைந்த வட்டியில் ஒரே இஎம்ஐ ஆக செலுத்தும் வசதியை வழங்குகிறது. இதனால் மாத செலவு கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தில் வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற பல வகை கடன்களை ஒரே கடனாக மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், உங்கள் சொந்த வீடு அல்லது வணிக சொத்தின் மதிப்பை அடிப்படையாக கொண்டு கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. பொதுவாக சொத்தின் மதிப்பில் 75% வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.