வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தேசிய சமூக உதவித் திட்டத்தை (NSAP) 2026-27 முதல் 2030-31 வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதற்காக ரூ.53,428 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது.
தேசிய சமூக உதவித் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், கடந்த 1995-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP), அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24
திட்டங்களின் புதிய பெயர்கள்
தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பிற துணைத் திட்டங்களின் பெயர்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) இனி 'பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா' என அழைக்கப்படும். முதியோர் ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா' என மாற்றப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசிய குடும்ப நலத் திட்டம் 'பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா' என மறுபெயரிடப்பட்டுள்ளது.
34
மாற்றுத் திறனாளிகளுக்கான தளர்வுகள், உதவித்தொகை உயர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சில முக்கியத் தளர்வுகளும் நிதி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித்தொகை பெறுவதற்கு முன்பு இருந்த 80% இயலாமை வரம்பு தளர்த்தப்பட்டு, இனி 40% இயலாமை இருந்தாலே இத்திட்டம் பொருந்தும். இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறந்தது முதல் (0 வயது) அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உதவித்தொகை பெறத் தகுதி பெறுகின்றனர்.
மாதாந்திர உதவித்தொகை விவரம்:
0 முதல் 79 வயது வரை மாதம் ரூ. 375
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 625
இச்சலுகைகளுக்கான விரிவான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் எவ்வித மாற்றமும் இன்றி பழைய நடைமுறையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டங்களின் விரிவாக்கம் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.20 கோடி ஏழை மக்கள் பயனடைவர். மேலும், இத்திட்டங்களுக்கான நிதியுதவி முழுவதும் இடைத்தரகர்கள் இன்றி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக (DBT - Direct Benefit Transfer) செலுத்தப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.