அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் 7.1% வட்டி கிடைக்கிறது. ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, 15 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் வரை சேர்க்கலாம். வரிச் சலுகைகளும் உண்டு.
தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பாக முதலீடு செய்து நல்ல லாபம் பெற விரும்புபவர்களுக்கு, அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக உள்ளன. அத்தகைய பிரபலமான திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகும். இது குறைந்த அபாயத்துடன், வரி இல்லாத வருமானத்தை விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதில் 7.1% வட்டி கிடைப்பதுடன், தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் பெரிய தொகையைச் சேர்க்க முடியும்.
25
PPF திட்டத்தில் 7.1% வட்டிவிகிதம்
இந்தத் திட்டத்தில் மத்திய அரசு 7.1% வருடாந்திர வட்டியை வழங்குகிறது. இந்த வட்டிக்கு வருமான வரி கிடையாது. இது அதிக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
PPF திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வு காலத்தில் கிடைக்கும் மொத்தத் தொகை என அனைத்துக்கும் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது EEE (Exempt-Exempt-Exempt) என்ற வரி விதிப்பின் கீழ் வருகிறது.
35
ரூ.500 முதல் ஆரம்பிக்கலாம்
அஞ்சல் அலுவலக PPF திட்டத்தில், வெறும் ரூ.500 முதலீட்டில் கணக்கைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்திற்குப் பிறகும், ஐந்து வருடத் தொகுப்புகளாக முதலீட்டைத் தொடர்ந்து நீட்டித்துக் கொள்ளலாம்.
ஒருவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அதாவது மாதத்திற்கு ரூ.12,500 சேமிக்க வேண்டும். இந்தத் தொகையை 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்தால், அவரின் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டுக்கு 7.1% வட்டி விகிதத்தில், ரூ.18,18,209 வட்டியாகக் கிடைக்கும். இதன்மூலம், 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.40,68,209 பெற முடியும். முதலீட்டுத் தொகையை தங்கள் வசதிக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ முடியும்.
55
PPF கடன் வசதி
PPF கணக்கைத் தொடங்கிய பிறகு, மூன்றாவது நிதியாண்டின் முடிவில் இருந்து கடன் பெறும் வசதி உண்டு. அதேபோல், கணக்கைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது. PPF கணக்கை எந்த அஞ்சல் அலுவலகத்திலும் அல்லது வங்கியிலும் தொடங்கலாம்.