மற்றொருவரின் கடனுக்கு ஜாமீன்தாரராகக் கையெழுத்திடுவது வெறும் சாதாரண உதவி அல்ல, கடன் வாங்குபவர் தவணை செலுத்தத் தவறினால், அது ஜாமீன்தாரரின் சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
நண்பர், உறவினர் அல்லது தெரிந்தவர் கடன் வாங்க நீங்கள் ஜாமீன் கையெழுத்து போடுவது (Guarantee) ஒரு சாதாரண உதவியாகத் தோன்றலாம். ஆனால், கடன் வாங்கியவர் தவணையைக் கட்டாமல் நிறுத்தினால் அல்லது அவரால் தவணை கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அது அவருடைய சிபில் (CIBIL) மதிப்பெண்ணை மட்டுமல்ல, ஜாமீன் கையெழுத்து போட்டவரின் கடன் மதிப்பெண்ணையும் பாதிக்கும்.
சில சூழ்நிலைகளில், வங்கி ஜாமீன்தாரரிடமிருந்தே நிலுவைத் தொகையை வசூலிக்கவும் முடியும். கடன் வாங்குபவர் தவணை செலுத்தத் தவறும் பட்சத்தில், ஜாமீன் கையெழுத்து போடுபவரின் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும் என்று டிரான்ஸ்யூனியன் சிபில் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், ஜாமீன்தாரரின் கடமை வெறும் கையெழுத்துடன் முடிந்துவிடுகிறதா, வங்கி நேரடியாக ஜாமீன்தாரரிடம் பணம் கேட்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
24
கடன் தவணை கட்ட தவறினால் கேரண்டி வழங்கியவரின் பங்கு
ஒரு கடனுக்கு ஜாமீன்தாரராக இருப்பது வெறும் ஆவணங்களில் கையெழுத்திடுவது மட்டுமல்ல. கடன் வாங்கியவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்பீர்கள் என்று வங்கிக்குக் கொடுக்கும் உத்தரவாதமாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2025-ஆம் ஆண்டு கடன் தகவல் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களின்படி, கடன் அறிக்கைகளில் இணை-கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன்தாரர் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும். அந்த அறிக்கையில், ஒரு நபர் கடன் வாங்கியவரா, இணை-கடன் வாங்கியவரா அல்லது ஜாமீன்தாரரா என்ற விவரமும் தெளிவாக இருக்கும்.
34
வங்கியால் நேரடியாகப் பணத்தை வசூலிக்க முடியுமா?
1872-ஆம் ஆண்டு இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 128-இன் படி, ஜாமீன் ஒப்பந்தத்தில் வேறு ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, ஜாமீன் கொடுத்தவரின் பொறுப்பும், கடன் வாங்குபவரின் பொறுப்புக்கு சமமாகும். சட்டரீதியாக இது 'இணைப் பொறுப்பு' (Co-responsibility) என அழைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் பணம் கட்டத் தவறினால், நிலுவைத் தொகையை ஜாமீன்தாரரிடமிருந்தும் பேங்க் கேட்கலாம்.
ஜாமீன் அளித்தவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியுமா?
நவ.28, 2025 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் 'வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் பெரிய அளவில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீதான வணிக வங்கிகளின் அணுகுமுறை' வழிகாட்டுதலும் இது குறித்து தெளிவாக விவரிக்கிறது. கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கி ஜாமீன்தாரருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம். கடன் வாங்குபவரிடமிருந்து வசூலிக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்திய பிறகே ஜாமீன்தாரரிடம் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நான் கடன் வாங்கவில்லை, என்றோ முதலில் அவரிடம் வசூலியுங்கள் என்றோ கூறி ஜாமீன் கொடுத்தவர் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
வங்கி முதலில் ஜாமீன்தாரருக்குக் காரணம் கேட்கும் அறிவிப்பை (Show Cause Notice) அனுப்ப வேண்டும். பதிலளிக்க வாய்ப்பு வழங்கி, நேரில் ஆஜராகவும் வழிவகை செய்ய வேண்டும். பொதுவாக, நிலுவைத் தொகை ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில், வேண்டுமென்றே தவறு செய்தவர் என்ற விதிகள் பொருந்தும்.
எனவே, மற்றொருவரின் கடனுக்கு ஜாமீன் கொடுப்பது உங்கள் எதிர்காலக் கடன் தேவைகளைப் பாதிக்கலாம். நீங்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, வங்கி உங்கள் கடன் விவரங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோரை கணக்கில் எடுத்துக்கொள்ளும். நீங்கள் ஜாமீன் வழங்கிய கடன்களும் உங்கள் கடன் அறிக்கையில் தெரியும் என்பதால், கிரெடிட் ஸ்கோரை அது பாதிக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.