petrol diesel
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து இக்ரா வெளியிட்ட அறிக்கையில்: கடைசியாக மார்ச் மாதம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்ட போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது.
தற்போது செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 74 டாலராக குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்த்தொடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல் குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம். உலக நாடுகளுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களுக்கான கச்சா எண்ணெய்யை ஈரான், ஈராக் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளும் வழங்கி வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டவுடன் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர் வரை அதிகரித்தது. தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி, வரும் நாட்களில் பெருமளவு சரியும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. ஆகையால் பெட்ரோல், டீசல் குறைய வாய்ப்பில்லை எனவே கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு குறைவு என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்க வாய்ப்புள்ளது.