மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவுக்கு, இந்திய திவால் மற்றும் நொடித்துப் போன வாரியத்தின் (IBBI) முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ். சாஹு தலைமை வகிக்கிறார். இதில் சட்டம், நிதி, காப்பீடு, ஆக்சுவேரியல், மூலதனச் சந்தை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவையான வெளி நிபுணர்களை ஆலோசனைகளுக்காக இணைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது PFRDA ஆலோசனைக் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லவும், உத்தரவாத ஓய்வூதியம் கட்டணங்களுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கவும் இந்த குழு செயல்படும். சேமிப்பு கட்டத்திலிருந்து ஓய்வூதியம் பெறும் கட்டத்திற்கு செல்லும் போது சந்தாதாரர்களுக்கு செயல்முறை எளிமையாகவும், வெளிப்படையாகவும், தடையின்றியும் இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கிறது.
மேலும் லாக்-இன் காலம், திரும்பப் பெறும் வரம்புகள், விலை நிர்ணயம், சேவை கட்டணங்கள் போன்ற செயல்பாட்டு அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும். இடர் மேலாண்மை, மூலதனத் தேவைகள், வரி விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தவறான விற்பனையைத் தடுக்கவும், உறுதி ஓய்வூதியம் மற்றும் "சந்தை அடிப்படையிலான உத்தரவாதம்" ஆகியவற்றின் வேறுபாட்டை மக்கள் புரிந்துகொள்ளவும் ஒரே மாதிரியான வெளிப்படுத்தல் முறையும் உருவாக்கப்பட உள்ளது. இந்நிபுணர் குழு பரிந்துரைகள் எதிர்காலத்தில் இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடும்.