Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதால் 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு திட்டம் தான் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை'. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியும் அமைத்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு இந்த திட்டமும் முக்கிய காரணமாக இருந்தது. திமுக அரசு தொடரும் பட்சத்தில் இந்த தொகை ரூ.2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக அறிவித்திருந்தது.
திமுகவைப் போலவே அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,500 ஆகவும், தவெக ரூ.2,500 ஆகவும் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தனர். ஆனால் தமிழகத்தின் கடன் சுமையால், இந்த திட்டம் பழைய முறையிலேயே மாதம் ரூ.1,000 ஆக தொடருமா? அல்லது முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல ரூ2,500-ஐ வழங்குவாரா என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வழங்கப்படும் உரிமைத் தொகையை பார்த்து கர்நாடகாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசும் மகளிருக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகையை வழங்கி வருகிறது.
மு. க ஸ்டாலின் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை காப்பி அடித்த கர்நாடக மாநில காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 ரூபாய் வழங்குவோம் எனத் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை ‘கிரஹலட்சுமி’ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது. அன்ன பாக்யா, சக்தி, கிரஹலட்சுமி, கிரக ஜோதி, யுவ நிதி போன்ற மகளிருக்கான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. அதில் ‘கிரஹலட்சுமி’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.2,000 கர்நாடக மாநில பெண்களுக்கு வழங்கப்பட்டது. இது அம்மாநில பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது
இந்தத் திட்டத்தால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் பலரும் காங்கிரஸ் அரசை பாராட்டி வந்தனர். இந்தத் திட்டம் மூலம் கிடைத்த நிதியை வைத்து பலர் சிறு தொழில் தொடங்கியதாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். இந்த நிலையில் கிரஹலட்சுமி திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது அரசின் கவனத்திற்கு தெரிய வந்தது. இறந்தவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு புகார்கள் வரத் தொடங்கின. இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வுகளின் முடிவுகளில் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தது. அதில் இறந்து போனவர்கள், ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்காதவர்கள், ஜிஎஸ்டி செலுத்தும் குடும்பத்தினர் என தகுதியில்லாத பல்வேறு தரப்பினருக்கும் ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முழுவதும் 1.20 கோடி கிரஹலட்சுமி பயனாளிகள் இருக்கும் நிலையில் தற்போது 4.30 லட்சம் பயனாளிகன் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
67
பயோமெட்ரிக் மூலம் பணம் வழங்கும் முறை
மேலும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின்படி கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் தங்கள் இருப்பை உறுதி செய்யும் வண்ணம், ஆதார் போலவே கண்கள், முகம், கைரேகை ஆகியவற்றை பதிவு செய்யும் முறையை கொண்டு வரவுள்ளது. இந்த பயோமெட்ரிக் செயல்முறைகள் நிறைவான பிறகு அடுத்த மாதத்திற்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
77
தவறாக வதந்தி பரப்பும் விஷமிகள்
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் 4.30 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது கர்நாடக மாநிலத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.