
அவசர மருத்துவச் செலவு, தனிப்பட்ட செலவுகள், வீட்டைப் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு விரைவாகப் பணம் திரட்ட வேண்டிய தேவை ஏற்படும்போது, தனிநபர் கடன்கள் கைகொடுக்கும். ஆனால், அதற்கு சம்பளச் சான்று கேட்பது வழக்கம். இதனால் பெர்சனல் லோன் கேட்டு விண்ணப்பிக்கும் பலர் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற நிலைகளில், சம்பளச் சான்று இல்லாமல் பெர்சனல் லோன் பெற பல வழிகள் உள்ளன. சில வழிகளில் கடன் பெறுதவற்கான செயல்முறை மிகவும் எளிமையாக இருக்கும். குறிப்பாக ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்கள் விஷயத்தில் செயல்முறை சீக்கரமாக முடிந்துவிடுகிறது.
சம்பளம் பெறும் நபராக இருந்தால், க்ரெடிட் ஸ்கோர் மற்றும் பான் கார்டு மூலமே கடன் வழங்குபவர்களுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். அப்போது, வருமானச் சான்று எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. சுயதொழில் செய்பவராகவோ, ஃப்ரீலான்ஸராகவோ அல்லது அமைப்புசாரா ஊழியர்களாகவோ இருந்தால், உங்கள் வருமானத்தை உறுதிசெய்யும் மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக, வருமானத்தைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக வங்கி அறிக்கைகள் அல்லது பணிச் சான்றிதழை கடன் வழங்குநர்கள் கோருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனைத் தீர்மானிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர். தனிநபர் கடன் பெறும்போது சில சமயங்களில் சம்பளச் சான்று மட்டுமின்றி, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வருமான வரிக் கணக்குகள் (ITR) ஆகியவற்றையும் கேட்கலாம்.
ஆனால், ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது சீரான வருமானம் இல்லாதவர்களிடம் அத்தகைய ஆவணங்கள் இருக்காது. அவர்கள் சம்பளச் சான்று இல்லாமலே தனிநபர் கடனைப் பெறலாம். அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன, எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம்.
ஆன்லைன் லோன் ஆப்ஸ்: ஆன்லைன் தனிநபர் கடன் செயலிகள் பொதுவாக சம்பளச் சான்றுகளைக் கேட்பதில்லை. சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கியின் க்ரெடிட் ஸ்கோர் அடிப்படையில் கடன் தகுதியை மதிப்பிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில், கூடுதல் தகவலுக்காக வங்கி அறிக்கைகளைப் பதிவேற்றுமாறு கேட்கக்கூடும். ஆனால், ஆன்லைனில் கடன் பெறுவது பல சமயங்களில் சைபர் மோசடிகளில் சிக்கவும் வழிவகுக்கிறது. இதுபோன்ற வழக்குகள் இப்போது அதிகமாகவே பதிவாகி வருவதால் ஆன்லைனில் லோன் வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாற்று வருமானச் சான்று: சம்பளச் சான்று இல்லாவிட்டால் வருமானத்திற்கான மாற்றுச் சான்று ஒன்றை வழங்கலாம். சுயதொழில் செய்பவராக இருந்தால், வழக்கமான டெபாசிட்கள், வருமான வரி அறிக்கைகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை தனிநபர் கடன் ஆவணங்களாக ஏற்கப்படலாம். இந்த ஆவணங்கள் கடன் பெறுபவரின் திருப்பிச் செலுத்தும் திறன் பற்றிய உறுதிப்பாட்டை அளிக்கின்றன.
பிணையக் கடன்: பிணையத்துடன் கூடிய தனிநபர் கடனைத் தேர்ந்தெடுப்பது சம்பளச் சான்று இல்லாதவர்களுக்கு இருக்கும் இன்னொரு ஆப்ஷன். இந்த வகைக் கடன்களைப் பெற ரியல் எஸ்டேட், பிக்ஸட் டெபாசிட் அல்லது தங்கம் போன்றவை சொத்துக்களை கடனுக்கான பிணையாக பயன்படுத்துகின்றன.
இன்னொருவருடன் கூட்டாக விண்ணப்பித்தல்: தனிநபர் கடன் கிடைக்கும் அளவுக்குச் சம்பளம் பெறாதவர் என்றால், நிலையான வருமானம் உள்ள இன்னொருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்ந்து விண்ணப்பிப்பது பெர்சனல் லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும். இணை விண்ணப்பதாரரின் சம்பளச் சான்று மற்றும் கடன் வரலாறு ஆகியவை உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை உறுதி செய்யும் ஆதாரமாக எடுத்துகொள்ளப்படலாம்.
பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள்: வங்கிகளுடன் ஒப்பிடும்போது, பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள் மிகவும் நெகிழ்வான விதிமுறைகளைக் கொண்டவை. இவை இப்போது பிரபலமாகி வருகின்றன. இந்தத் தளங்கள் பெரும்பாலும் சிறிய அளவிலான தனிநபர் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. சம்பளச் சான்று இல்லாமலே, பிற வருமானம் அல்லது சொத்துக்கள் இருந்தால் அதை வைத்துக் கடன் கொடுக்கின்றனர்.
வலுவான கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் ஸ்கோர் வலுவாக இருந்தால், சில சமயங்களில் சம்பளச் சான்று இல்லாமலே கூட பெர்சனல் லோன் கிடைக்கலாம். சிறப்பான க்ரெடிட் ஸ்கோர் கடனைப் பொறுப்புடன் திரும்பச் செலுத்தும் வழக்கம் கொண்டவர் என்பதற்கான அடையாளமாக இருக்கும். இதன் மூலம் வருமானச் சான்று இல்லாமல் தனிநபர் கடன் கிடைக்கக்கூடும்.