மளிகை, காய்கறி மாதிரி இனிமே எல்பிஜி சிலிண்டரையும் குயிக் காமர்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் வாங்கலாம். இன்ஸ்டாமார்ட் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய சேவையைத் தொடங்கியுள்ளன.
ஆன்லைன்ல சாப்பாடு, மளிகை சாமான் ஆர்டர் பண்றது இப்போ சகஜம். ஆனா, சமையல் கேஸ் சிலிண்டரையும் சில நிமிஷத்துல வீட்டுக்கு வரவைக்கலாம்னு சொன்னா நம்புவீங்களா? குயிக்-காமர்ஸ் நிறுவனமான இன்ஸ்டாமார்ட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) உடன் இணைந்து இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஆன்-டிமாண்ட் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் முதல் குயிக்-காமர்ஸ் நிறுவனம் என்ற பெருமையை இன்ஸ்டாமார்ட் பெற்றுள்ளது. தற்போதைக்கு பெங்களூருவில் இந்த சேவை தொடங்கியுள்ளது. இது வெற்றி பெற்றால், விரைவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம்.
24
எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என்பதை சுலபமாகப் பார்க்க முடியும்
HPCL சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'HP Navya' 10 கிலோ காம்போசிட் எல்பிஜி சிலிண்டரை இன்ஸ்டாமார்ட் மூலம் வாங்கலாம். இந்த சிலிண்டர் பழைய இரும்பு சிலிண்டர்களை விட எடை குறைவானது. மேலும், இதன் வெளிப்படையான டிசைன் மூலம், உள்ளே எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என்பதை சுலபமாகப் பார்க்க முடியும். இதுதவிர, HPCL வழங்கும் 5 கிலோ மெட்டல் சிலிண்டரும் இன்ஸ்டாமார்ட்டில் கிடைக்கிறது. இதையும் ஆர்டர் செய்து சில நிமிடங்களிலேயே வீட்டுக்கு டெலிவரி பெறலாம். இந்த புதிய சேவை மாணவர்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
34
கேஸ் கனெக்ஷன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
இந்த சேவையின் மிகப்பெரிய வசதி என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு முன்பே கேஸ் கனெக்ஷன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் முறை சிலிண்டர் வாங்குபவர்கள் புதிய வாடிக்கையாளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள். சிலிண்டர் காலியான பிறகு, பழையதை கொடுத்துவிட்டு புதிய சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். எல்பிஜி போன்ற எரிபொருளை டெலிவரி செய்வதில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா ஆர்டர்களையும் HPCL-ன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாகவே டெலிவரி செய்கிறார்கள். பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே சிலிண்டர்களை வழங்குவார்கள். முதல் முறை வாங்கும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக அடையாளச் சான்று சரிபார்ப்பை (ID verification) முடிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் குயிக் காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 10 முதல் 20 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்றவை வீட்டுக்கே வருகின்றன. இப்போது இந்த பட்டியலில் எல்பிஜி சிலிண்டர்களும் இணைந்துள்ளன. 2020-ல் தொடங்கப்பட்ட இன்ஸ்டாமார்ட், தற்போது 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது. 50,000-க்கும் மேற்பட்ட பொருட்களை டெலிவரி செய்யும் இந்த நிறுவனம், இப்போது எல்பிஜி டெலிவரி துறையிலும் கால் பதித்துள்ளது. இன்ஸ்டாமார்ட் - ஹெச்பிசிஎல் கூட்டணியை, இந்தியாவில் எல்பிஜி வாங்கும் முறையை மாற்றும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.