Flights Fare Hike: விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அக்டோபர் 6 முதல் புதிய டிக்கெட் முன்பதிவுகளுக்கான கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமான எரிபொருள் (ATF) விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அக்டோபர் 6, 2026 நள்ளிரவு 12:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விமான எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் 14% மேல் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ATF செலவுகள் அதிகரித்துள்ளன" என இண்டிகோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
24
கட்டண உயர்வு எவ்வளவு?
இந்த புதிய கட்டண திருத்தத்தின்படி, உள்நாட்டுப் பயணங்களில் 500 கி.மீ வரை பயணிக்கும் பயணிகள் ரூ.375 எரிபொருள் கட்டணமாக செலுத்த வேண்டும். 501 முதல் 1,000 கி.மீ வரையிலான உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.600-ம், 1,001 முதல் 1,500 கி.மீ வரையிலான பயணங்களுக்கு ரூ.900-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
1,501 முதல் 2,000 கி.மீ தூரம் வரை பயணிப்பவர்கள் ரூ.1,150 செலுத்த வேண்டும். 2,000 கி.மீ-க்கு மேல் செல்லும் விமானங்களுக்கு ரூ.1,300 எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும். தூரம் மற்றும் செல்லும் இடத்தைப் பொறுத்து சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தையும் இண்டிகோ மாற்றியமைத்துள்ளது.
34
எரிபொருள் கட்டணம் உயர்வு
சார்க் (SAARC) நாடுகளுக்கு இடையேயான பயணங்களில், 500 கி.மீ வரையிலான தூரத்திற்கு ரூ.1,000-ம், 501 கி.மீ மற்றும் அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு ரூ.3,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கு ஆசியாவிற்கு செல்லும் விமானங்களுக்கு ரூ.5,500 எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆப்பிரிக்காவிற்கு செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐரோப்பாவிற்கு பயணிக்கும் பயணிகள் ரூ.10,000 செலுத்த வேண்டும்.
பயணிகளை இந்த விலை உயர்வு அதிகம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, உண்மையான எரிபொருள் செலவை விட குறைவான அளவிலேயே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. "எரிபொருள் விலை உயர்வை ஈடுகட்ட கட்டணத்தை இன்னும் அதிகமாக உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் மிகக் குறைந்த அளவிலேயே கட்டணத்தை மாற்றியமைத்துள்ளோம்" என விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் புரிந்துகொள்வதாகவும், ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. "இந்த புதிய எரிபொருள் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதற்கு இண்டிகோ வருந்துகிறது. இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் மாறிவரும் சந்தை சூழ்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அது குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை மற்றும் சந்தை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் கட்டணங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.