பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத சலுகை இருப்பது உங்களுக்குத் தெரியுமா? யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.
இந்திய ரயில்வே மாணவர்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. குறிப்பிட்ட தகுதியுடைய மாணவர்கள் வீட்டுக்கும் கல்வி நிலையத்துக்கும் இடையே இலவசமாகப் பயணம் செய்ய இரண்டாம் வகுப்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டைப் பெறலாம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சலுகைப் பட்டியலில், பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கும் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த இலவசப் பயணச் சலுகை குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இலவச மாதாந்திர பயண அட்டைக்கான வகுப்பு வரம்பு குறித்த அதிகாரப்பூர்வ இணையதள விவரங்களில் வேறுபாடு இருப்பதால், விண்ணப்பிக்கும் முன் ரயில் நிலையத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
25
150 கி.மீ. வரை பயணிக்கலாம்
இலவச மாதாந்திர பயண அட்டை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அதிகபட்சம் 150 கி.மீ. தூரம் வரை வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையே பயணம் செய்யலாம். இரண்டாம் வகுப்பில் மட்டுமே இந்த வசதி பொருந்தும். மேலும், இந்த இலவச அட்டை மெயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்காது. மாதாந்திர அட்டை மட்டுமே வழங்கப்படும்; காலாண்டு அட்டைக்கு இந்த இலவசச் சலுகை கிடையாது. எனவே, பயணிக்கும் ரயில் மற்றும் நிலையங்களுக்கு ஏற்ப விதிகளைச் சரிபார்க்க வேண்டும்.
35
பாஸ் பெறுவது எப்படி?
மாணவர்கள் தங்களது பள்ளி அல்லது கல்லூரியின் அடையாள அட்டை, கல்வி நிலையத்தின் சான்று மற்றும் தேவையான புகைப்பட ஆவணங்களுடன் அருகிலுள்ள ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரை அணுகலாம். அங்கு இலவச மாதாந்திர பயண அட்டைக்கான தகுதி மற்றும் விண்ணப்ப நடைமுறைகளைக் கேட்டறிய வேண்டும். அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு தகுதியின் அடிப்படையில் பயண அட்டை வழங்கப்படும். இந்த அட்டை குறிப்பிடப்பட்டுள்ள வீட்டுக்கும் கல்வி நிலையத்துக்கும் இடையிலான நிலையங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இலவசப் பயணத்திற்கு தகுதி இல்லாத மாணவர்களுக்கும் ரயில்வே கட்டணச் சலுகைகளை வழங்குகிறது. பொதுப்பிரிவு மாணவர்கள் சொந்த ஊருக்குச் செல்லவும் கல்விச் சுற்றுலாவுக்கும் இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி வகுப்பில் 50 சதவீதச் சலுகை பெறலாம். பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இதே பயணங்களுக்கு 75 சதவீதச் சலுகை வழங்கப்படுகிறது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் சுற்றுலாவுக்காக இரண்டாம் வகுப்பில் 75 சதவீதச் சலுகையும் உள்ளது.
55
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேர்வர்களுக்கும் சலுகை
மாணவர்களுக்கான மற்றொரு முக்கிய வசதி தேர்வுகளுக்கான பயணச் சலுகையாகும். யுபிஎஸ்சி மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 50 சதவீதக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், 35 வயது வரையிலான ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்காக இரண்டாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி வகுப்பில் 50 சதவீதச் சலுகை பெறலாம். இந்தச் சலுகைகளுக்குத் தேவையான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விதிகளை இந்திய ரயில்வே இணையதளத்தில் சரிபார்ப்பது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.