
உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) சரியான நேரத்தில் சமர்ப்பித்து இருந்தாலும், ரீஃபண்ட் பணத்தைப் பெறுவதற்கு நேரம் ஆகலாம். பணத்தைத் திரும்பப்பெற அனுமதிக்கும் முன்பாக, வருமான வரித்துறை பல சோதனைகளைச் செய்ய வேண்டும். இதனால்தான் ரீஃபண்ட் கிடைக்கத் தாமதம் ஆகிறது.
வருமான வரித்துறை கணக்குகளைச் சரிபார்க்கும் செயல்முறை காரணமாக ரீஃபண்ட் கிடைப்பது தாமதம் ஆக ஒரு காரணம். கணக்கு விவரங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வழக்கமாக 20-45 நாட்கள் ஆகும்.
வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தபோது சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவில்லை என்றாலும் ரீஃபண்ட் கிடைப்பது தாமதம் ஆகும். மின்னணு சரிபார்ப்புக் முறை (EVC) பயன்படுத்துவதன் மூலமாகவோ கையொப்பமிட்ட வருமான வரி கணக்கு (ITR-V) சமர்ப்பிப்பதன் மூலமாகவோ சரிபார்ப்பை உறுதிசெய்யலாம்.
வருமானக் கணக்குகளில் உள்ள தவறுகள் ரீஃபண்ட் தாமதத்திற்கு வழிவகுக்கும். தவறாகக் குறிப்பிட்ட வருமானம் மற்றும் விடுபட்ட ஆவணங்கள் ஆகியவை பொதுவாக நேரும் தவறுகள் ஆகும். ஆவணங்களுடன் ஒப்பிடும்போது, வருமானக் கணக்கீட்டில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், கூடுதல் ஆய்வு தேவைப்படலாம், இதனால் ரீஃபண்ட் வழங்க அதிக நாள் ஆகலாம்.
வரி செலுத்துவோரின் வருமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள TDS விவரங்கள் படிவம் 26AS இல் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். இரண்டுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால், ரீஃபண்ட் பணத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். அனைத்தும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய, வருமான வரித்துறை சில சமயங்களில் வருவாய் வழிகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. வருமான வரித்துறை இந்த கூடுதல் ஆய்வை முடிக்கும் வரை ரீஃபண்ட் தொகையைப் திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.
வங்கிக் கணக்கு மூலமாகவும் ரீஃபண்ட் பெறுவதில் தடை இருக்கலாம். தவறான அல்லது காலாவதியான வங்கிக் கணக்கு விவரங்களை அளித்திருந்தாலும் ரீஃபண்ட் பணத்தைத் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வருமான வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்த நிலுவைத் தொகையை ஈடுகட்ட வருமான வரித்துறை ரீஃபண்ட் தொகையை பிடித்தம் செய்திருக்கலாம். வருமான வரித்துறையிலோ வங்கியிலோ ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் ரீஃபண்ட் பணம் கிடைப்பதை தாமதப்படுத்தலாம்.
வருமான வரித்துறையில் இருந்து ரீஃபண்ட் பெறுவது தாமதமானால் என்ன செய்வது? முதலில் வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் (e-Filing) இணையதளத்தில் ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் என்ன என்று பார்க்கவும். இது தற்போதைய நிலையை அறிய உதவும். ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்றும் அறிந்துகொள்ளலாம்.
ரொம்ப தாமதமாகும்போது, அது குறித்து விளக்கமும் கிடைக்கவில்லை என்றால் e-Filing போர்ட்டலில் உள்ள e-Nivaran பிரிவின் மூலமாகவோ அல்லது மத்திய செயலாக்க மையத்தின் (CPC) உதவி எண் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
வருமானவரிக் கணக்கில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபட்ட தகவல்கள் உள்ளதா என ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும். இந்தச் சிக்கல்களை உடனடியாகச் சரிசெய்வது ரீஃபண்ட் செயல்முறையை விரைவுபடுத்த உதவும். வருமான வரித் துறையால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்வது விரைவாக பணம் கிடைக்க வழிவகுக்கும்.
எதிர்காலத்தில் ரீஃபண்ட் தாமதமாவதைத் தவிர்க்க, முடிந்தவரை விரைவாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு முடியும்போது ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்க இது உதவும்.