தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் டாலர் சரிவு இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
தங்கத்துக்கு பிறகு இப்போது வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை ஏற்றத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்ததால், ஒரு கிலோ வெள்ளி விலை முதல்முறையாக ரூ.3 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது. வெறும் மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 30% வரை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடையே வெள்ளி சந்தையில் சுழல் உருவாகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 94.75 டாலர் வரை உயர்ந்தது, பின்னர் 93.30 டாலர் வரை சிறிது குறைந்தது.
25
வெள்ளி விலை
இந்த திடீர் ஏற்றத்திற்கு முக்கிய காரணம் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை. வர்த்தக பதற்றங்கள் அதிகரிப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவது வெள்ளிக்கு வலு சேர்க்கிறது. தங்கம் போலவே பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணத்தில் பலர் வெள்ளியையும் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக இந்திய சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3.27 லட்சம் வரை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35
1970 ஆண்டு நடைபெற்ற சம்பவம்
வெள்ளி விலை உயரும் போது, சிலருக்கு உடனே 1970-களின் சரிவு வரலாறு நினைவுக்கு வருகிறது. அப்போது ஹன்ட் சகோதரர்கள் வெள்ளிச் சந்தையை கட்டுப்படுத்த முயன்றதால் விலை வேகமாக உயர்ந்தது. ஆனால் பின்னர் கட்டுப்பாடுகள் வந்ததும் விலை சுமார் 78% வரை சரிந்தது. அதனால், அதே மாதிரி இப்பவும் சரிவா? என்ற பயம் இயல்பாக வருகிறது.
ஆனால் தற்போதைய சூழல் வேறுபட்டது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்போது ஒரு குறிப்பிட்ட குழு சந்தையை இயக்கியது. இப்போது உலக அரசியல் சூழல், நாணய மதிப்பு மாற்றம், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மனநிலை போன்ற பல காரணங்கள் விலையை மேலே தள்ளுகின்றன. இருந்தாலும், மிகுந்த உற்சாகத்தில் வேகமாக முடிவு எடுக்காமல் எச்சரிக்கையுடன் நடப்பதே பாதுகாப்பு என்று அறிவுறுத்துகின்றனர்.
55
முதலீடு
முதலீடு செய்யும் முன் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளி விலையில் திடீர் ஏற்ற இறக்கம் அதிகம், எனவே முழுத் தொகையையும் ஒரே தடவையில் போட வேண்டாம். தங்கம் போல மத்திய வங்கிகளின் ஆதரவு இதில் இல்லை என்பதும், ஊக வணிகம் அதிகம் என்பதும் உண்மை. நீண்ட காலத்தில் உலோகங்களுக்கு பொருத்தமான சூழல் இருந்தாலும், சந்தையில் கட்டுப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் லாபம் பார்க்க நினைப்பவர்கள் திட்டமிட்டு, படிப்படியாக செயல்படுவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.