
1. வர்த்தக முத்திரை பதிவு செய்வது எப்படி?
டிரேட் மார்க் எனப்படும் வர்த்தக முத்திரை வணிகங்கள் தங்கள் பிராண்ட் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான வழியாக உள்ளது. இது உரிமையாளருக்கு பதிவுசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்காக, அந்த வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தும் பிரத்யேக உரிமையைக் கொடுக்கிறது. இந்தியாவில், இந்த செயல்முறை வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 (Trade Marks Act, 1999) மற்றும் வர்த்தக முத்திரைகள் விதிகள், 2017 (Trade Marks Rules, 2017) ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது.
2. வர்த்தக முத்திரை பதிவு மற்றும் அதிகார வரம்பு:
இந்தியாவில் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்த்தக முத்திரை பதிவேடு (Registrar of Trademarks) உள்ளது. இது வர்த்தக முத்திரைகளின் பதிவாளரால் மேற்பார்வையிடப்படுகிறது. இதற்கு ஐந்து பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து விண்ணப்பங்களைக் கையாளுகின்றன.
டெல்லி (வடக்கு), மும்பை (மேற்கு), சென்னை (தெற்கு), கொல்கத்தா (கிழக்கு), அகமதாபாத் (குஜராத் பகுதி) ஆகிய நகரங்களில் டிரேட் மார்க் பதிவுக்கான அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் அதிகார வரம்பு விண்ணப்பதாரரின் வணிக இடம் அல்லது வர்த்தக முத்திரை விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட முகவரியின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.
3. வர்த்தக முத்திரை பதிவு செயல்முறை:
வர்த்தக முத்திரை பதிவுக்கான செயல்முறை பல நிலைகளை உள்ளடக்கியது:
1) விண்ணப்பித்தல்: தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் வர்த்தக முத்திரை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் டிரேட் மார்க் பெறுவதற்கான செயல்முறை தொடங்குகிறது. விண்ணப்பதாரர் வர்த்தக முத்திரையின் பெயர், அது பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்கள் அல்லது சேவைகள் மற்றும் வர்த்தக முத்திரையின் வகைப்பாடு போன்ற விவரங்களை வழங்க வேண்டும். வர்த்தக முத்திரைகள் 45 வகுப்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் பொருட்களுக்கு 34 வகைகளும் சேவைகளுக்கு 11 வகைகளும் உள்ளன.
2) தேர்வு: விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள வர்த்தக முத்திரைகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்கும் வர்த்தக முத்திரை அலுவலகம் விண்ணப்பத்தை ஆய்வு செய்யும். இதற்கு பல மாதங்கள் ஆகலாம்.
3) விளம்பரம்: விண்ணப்பம் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அது வர்த்தக முத்திரை இதழில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்கள் வர்த்தக முத்திரையுடன் ஒத்துப்போவதாகக் கருதினால், பதிவை எதிர்க்க 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
4) எதிர்ப்பு: எந்த எதிர்ப்பும் இல்லை என்றால், அல்லது உண்டாகும் எதிர்ப்பு விண்ணப்பதாரருக்கு ஆதரவாக தீர்க்கப்பட்டால், வர்த்தக முத்திரை பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எதிர்ப்பு ஏற்பட்டால், விண்ணப்பதாரர் விசாரணைகளில் கலந்துகொண்டு தங்கள் தரப்புக்கு ஆதரவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
5) பதிவு: வர்த்தக முத்திரை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை சட்டப் பாதுகாப்பைக் கொண்டது. அதனை ® என்ற சின்னத்துடன் பயன்படுத்தப்படலாம்.
4. கால அளவு மற்றும் புதுப்பித்தல்:
ஒரு வர்த்தக முத்திரை பதிவு விண்ணப்பித்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். வர்த்தக முத்திரையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலவரையின்றி புதுப்பிக்கலாம். காலாவதி தேதிக்கு முன் வர்த்தக முத்திரையைப் புதுப்பிப்பது முக்கியம். ஏனெனில் அவ்வாறு செய்யத் தவறினால் பதிவேட்டில் இருந்து வர்த்தக முத்திரை நீக்கப்படும். இருப்பினும், தேவையான கட்டணத்தைச் செலுத்தி 6 மாதங்களுக்குள் அதை மீட்டெடுக்கலாம்.
5. சட்ட கட்டமைப்பு:
வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999, இந்தியாவில் வர்த்தக முத்திரை பாதுகாப்பிற்கான கட்டமைப்பை வழங்கும் முக்கிய சட்டம் ஆகும். அதில் உள்ள சில குறிப்பிடத்தக்க விதிகள் பின்வருமாறு:
வர்த்தக முத்திரையின் வரையறை: ஒரு வர்த்தக முத்திரையில் பொருட்கள் அல்லது சேவைகளை வேறுபடுத்தும் எந்தவொரு அடையாளம், சின்னம், சொல், லோகோ அல்லது வேறு எந்த அடையாளமும் அடங்கும்.
வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் உரிமைகள்: ஒரு வர்த்தக முத்திரை பதிவுசெய்யப்பட்டவுடன், அது பதிவுசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக வர்த்தக முத்திரையைப் பயன்படுத்த உரிமையாளருக்கு பிரத்யேக உரிமை உண்டு. வர்த்தக முத்திரை உரிமைகளை மீறும் எவருக்கும் எதிராக உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
வர்த்த முத்திரை விதிமீறல்: அனுமதியின்றி பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையை யாராவது பயன்படுத்தினால், அது மீறலாகக் கருதப்படுகிறது. சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
6. வர்த்தக முத்திரை பதிவின் முக்கியத்துவம்:
வர்த்தக முத்திரை பதிவு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
பிரத்தியேக உரிமைகள்: பதிவுசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பாக வர்த்தக முத்திரையைப் பயன்படுத்த உரிமையாளருக்கு பிரத்யேக உரிமைகள் கிடைக்கின்றன.
சட்டப் பாதுகாப்பு: வர்த்தக முத்திரை பதிவு பிராண்டின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது விதிமீறலுக்கு எதிராக சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
பிராண்ட் மதிப்பு: இது பிராண்ட் மதிப்பை மேம்படுத்துகிறது. நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைகிறது.
பணப் பலன்கள்: பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையை நிதி ஆதாயம் பெறுவதற்காகவும் ஒதுக்கலாம் அல்லது உரிமம் பெறலாம்.
7. வர்த்தக முத்திரை பதிவுக்கு எதிர்ப்பு:
வர்த்தக முத்திரை இதழில் விளம்பரப்படுத்தப்பட்டவுடன், எந்தவொரு தரப்பினரும் வெளியீட்டு தேதியிலிருந்து 4 மாதங்களுக்குள் பதிவை எதிர்க்கலாம். ஏற்கெனவே இருக்கும் முத்திரையுடனான ஒற்றுமை, மற்றொரு முத்திரையுடன் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற காரணங்கள் அடிப்படையில் எதிர்ப்பு கிளம்பலாம். எதிர்ப்பை வர்த்தக முத்திரை பதிவாளரே கையாளுவார். தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரலாம்.
இந்தியாவில் வர்த்தக முத்திரை பதிவு வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவர்களின் அறிவுசார் சொத்துக்காக வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த செயல்முறை விண்ணப்பம், ஆய்வு, வெளியீடு, எதிர்ப்பு மற்றும் இறுதிப் பதிவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது.
வர்த்தக முத்திரை வணிகங்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நியாயமான போட்டியைப் பராமரிப்பதிலும் சந்தை ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.