
வீட்டுக்கடன் வாங்குபவர்கள் முழு கடனையும் திரும்பச் செலுத்துவதற்கு பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் EMI தொகையை செலுத்துவதில் ஏற்படும் சவால்தான். ஆனால், இந்தச் சவாலை எளிதாக வெல்ல முடியும். உதாரணமாக, ரூ.50 லட்சத்துக்கு வீட்டுக்கடன் வாங்கியவர், அந்தத் தொகையை 10 ஆண்டுகளில் முழுமையாகத் திரும்பச் செலுத்தலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
நீண்ட கடன் காலமாக தவணையை செலுத்திவருவது, அதிக வட்டி சுமையை ஏற்படுத்தும். உதாரணமாக, 9% வட்டியுடன் ரூ.50 லட்சம் கடன் பெற்று அதை 10 ஆண்டுககளில் செலுத்தினால் மொத்த வட்டி ரூ.26 லட்சம். இதுவே 15 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால், வட்டி ரூ.41 லட்சம் வரை செல்லும். 20 ஆண்டுகளாக இருந்தால் வட்டி ரூ.58 லட்சம் வரை போய்விடும். கடன் பெறுபவர்கள் வட்டி செலுத்துவதைக் குறைக்க, EMI காலத்தை முடிந்தவரை குறுகியதாக வைத்திருக்க வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
EMI தொகையை 5% அதிகரிப்பதன் மூலம் 20 வருட கடன் காலத்தை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் குறைக்கலாம். இப்படி 10% அதிகரித்தால், 20 வருடத்தில் முடியக்கூடிய கடன் 10 ஆண்டுகளில் முடிவடையும். ஆண்டுதோறும் வருமானம் 8-10% அதிகரிக்கும் என எதிர்பார்த்தால், EMI 5% உயர்த்துவது பொருத்தமாக இருக்கும். கூடிய விரைவில் EMI தொகையை அதிகரிப்பது நல்லது. பரிசுத்தொகை, வருடாந்திர போனஸ் போன்ற கூடுதல் வருமானத்தை கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.
ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வினால், கடன் செலுத்த முடியாமல் போனால், உங்களைச் சார்ந்திருப்பவர்களைப் பாதுகாக்க, ஒரு ஆயுள் காப்பீடு எடுப்பது நல்லது. இருப்பினும், வங்கிகள் வீட்டுக் கடனுடன் சேர்ந்து வழங்கும் ஆயுள் காப்பீடு அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. ஏனெனில் அது ஒவ்வொரு முறை EMI செலுத்தும்போதும் குறைந்துகொண்டே வரும். தனி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், கடனை முன்கூட்டியே செலுத்தினாலோ கடனளிப்பவரை மாற்றினாலோ கூட அந்தக் காப்பீடு தொடர்ந்து கிடைக்கும்.
பெரும்பாலான வீட்டுக் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் குறிப்பிட்ட அளவுகோலுடன் இணைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாறுபடுகிறது. பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் அடிப்படையில்தான் வீட்டுக்கடன் மீதான வட்டியைத் திருத்துகின்றன. ரெப்போ வட்டி விகிதம் ஜூன் 2023 முதல் 6.5% என்ற அளவில் நிலையானதாக உள்ளது. ஆனால் வங்கிகள் ரெப்போ வட்டி விகிதத்தைத் தவிர வேறு அளவுகோல்களையும் தேர்வு செய்யலாம். கடன் வழங்குபவர்கள் பொதுவாக காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டியை மாற்றி அமைக்கக்கூடும்.
வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கடன்களுக்கு அரசு வரிச் சலுகைகளை வழங்குகிறது. பிரிவு 24பி படி, ரூ.2 லட்சம் வரை வீட்டுக் கடனுக்கான வட்டியில் விலக்கு கோரலாம். இருப்பினும், வீட்டு வாங்கவும் கட்டவும் ஆகும் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, கடந்த 4-5 ஆண்டுகளில் சராசரி வீட்டுக்கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24ல் 30% கடன்கள் ரூ.75 லட்சத்தை தாண்டியது. தற்போதைய 9% வட்டி விகிதத்தில், 20 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடனுக்கான ஆண்டு வட்டி மொத்தம் ரூ.4.5 லட்சம் வரும். கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், கூட்டாக வீட்டுக் கடன் பெறலாம். அப்போது அவர்கள் கூட்டாக ரூ.4 லட்சம் வரை வீட்டுக்கடன் தள்ளுபடி கோரலாம். இருவரும் தனித்தனியாக தலா ரூ.2 லட்சம் வரி விலக்கு கோரலாம். கூட்டு வீட்டுக்கடன்கள் பெறுவதில் இன்னும் சில நன்மைகளும் உள்ளன. சில மாநிலங்கள் ஒரு பெண்ணின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சொத்துக்களுக்கு குறைந்த முத்திரை வரி விதிக்கின்றன. உதாரணமாக, டெல்லியில், ஆண்களுக்கு இந்த வரி 6%. அதே நேரத்தில் பெண்ணுக்கு இந்த வரி 4% மட்டுமே.