8th Pay Commission: 8வது சம்பள கமிஷனில் பரிசீலனையில் உள்ள ஒரு முக்கிய மாற்றம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாற்றம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 8வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறித்து இப்போது ஒரு புதிய விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை அனைவரும் ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பற்றி மட்டுமே பேசி வந்தனர். ஆனால், இப்போது சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் மற்றொரு முக்கிய விஷயம் வெளிவந்துள்ளது. அதுதான் 'ஃபேமிலி யூனிட்'. குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதில் இந்த ஃபேமிலி யூனிட் கணக்கீடு மிகவும் முக்கியமானது. இதில் மாற்றம் செய்தால் ஊழியர்களின் சம்பளம் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 8வது சம்பள கமிஷன் தொடர்பான அப்டேட்களைப் பகிரும் ஒரு எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு, இதுகுறித்த சுவாரஸ்யமான கணக்கீடுகளை வெளியிட்டுள்ளது.
25
8வது சம்பள கமிஷன் ஃபேமிலி யூனிட்
7வது சம்பள கமிஷன், குறைந்தபட்ச சம்பளத்தைக் கணக்கிட 'ஃபேமிலி யூனிட்' அளவை 3.0 ஆக எடுத்துக்கொண்டது. ஒருவேளை இதை 4.6 ஆக எடுத்திருந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000-க்கு பதிலாக ரூ.27,600 ஆக இருந்திருக்கும். இந்த கணக்கீட்டின்படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.94 ஆக மாறியிருக்கும். 7வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்திய 2.57 உடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம். இந்த மாற்றம் மட்டும் நடந்திருந்தால், ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருக்கும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
35
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன், ஃபேமிலி யூனிட்டை அரசு ஊழியர் (1.0), வாழ்க்கைத்துணை (0.8), இரண்டு குழந்தைகள் (தலா 0.6 வீதம் 1.2) என மொத்தம் 3.0 ஆகக் கணக்கிட்டது. ஆனால், இதில் ஊழியரைச் சார்ந்துள்ள வயதான பெற்றோரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இன்றைய காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகளும் செலவுகளும் அதிகரித்துள்ளன. எனவே, 8வது சம்பள கமிஷன் இந்த ஃபேமிலி யூனிட்டை 4.6 முதல் 5.0 வரை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோருகின்றனர். தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனைக் குழுவின் (National Council Joint Consultative Machinery Staff Side) ஊழியர் தரப்பும், தங்கள் கோரிக்கை மனுவில் இந்த ஃபேமிலி யூனிட் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளது. இதன் மூலம் இன்றைய தலைமுறை ஊழியர்களின் குடும்பப் பொறுப்புகளுக்கு நியாயம் கிடைக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த விஷயம் குறித்து பேங்க்பஜார் (BankBazaar) சிஇஓ அதில் ஷெட்டி ஒரு ஊடகத்திடம் பேசும்போது முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 'ஒரு அரசு ஊழியரின் குடும்ப வாழ்க்கைச் செலவைக் கணக்கிட சம்பள கமிஷன் பயன்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஃபேமிலி யூனிட்டும் ஒன்று' என்று அவர் கூறினார். 'ஒருவேளை ஊழியர் சங்கங்கள் கேட்பது போல 8வது சம்பள கமிஷன் இந்த ஃபேமிலி யூனிட்டை உயர்த்தினால், குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு மதிப்பீடும் உயரும். இது நேரடியாகக் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது சம்பளக் கட்டமைப்பு முழுவதும் இந்த குறைந்தபட்ச சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இதில் எந்த மாற்றம் வந்தாலும் அது அனைத்து நிலை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தும்' என்று அவர் விளக்கினார்.
55
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு
கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மீதான குடும்பப் பொறுப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், மனைவி, பிள்ளைகளுடன் வயதான பெற்றோரை கவனிப்பது பெரிய சவாலாக மாறியுள்ளது. உதாரணமாக, 7வது சம்பள கமிஷன் முறையைப் பின்பற்றி ஃபேமிலி யூனிட்டை 4.6 ஆகக் கணக்கிட்டால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.27,600 ஆக உயரும் என மதிப்பிடப்படுகிறது.
ஆனால், இந்த ஃபேமிலி யூனிட் மாற்றம் குறித்து 8வது சம்பள கமிஷன் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. ஒருவேளை இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் கிடைத்தால், அது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சம்பளக் கட்டமைப்பு முழுவதும் இந்த அளவுகோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அதிக அளவில் பணம் வந்து சேர்வது உறுதி.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.