
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தில் பெரும் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. பல பரிந்துரைகளை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000 ஐ இன்னும் உயர்த்த இருப்பதாகத் தெரிகிறது. EPF நிதியில் ஊழியர்களின் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வூதியத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யும் திட்டம் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை EPF ஓய்வூதியதாரருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு வழங்குவது இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக உள்ளது.
EPF உறுப்பினர்களை ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஊக்குவிக்க இந்த முன்மொழிவை தொழிலாளர் அமைச்சகம் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது. நீண்ட சேவை காலத்திற்குப் பிறகும் குறைந்த ஓய்வூதியம் பெறும் நிலையை சரிசெய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதில் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையான ஆயிரம் ரூபாயை அதிகரிப்பதற்கான யோசனையும் அடங்கும்.
EPF இன் கீழ் சமூகப் பாதுகாப்பின் கட்டமைப்பை வலுப்படுத்த, தொழிலாளர் அமைச்சகம், EPS-1995 திட்டத்தின் கீழ், அதிக ஓய்வூதியத்திற்காக, உறுப்பினர்களின் EPS நிதிக்கு அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வாய்ப்பை வழங்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தொடர்பான இந்த ஆலோசனைகளின்போது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான ஓய்வூதியத் திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றுதல், EPF உறுப்பினர்களின் கவலைகளை நிவர்த்தி செய்தல் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, அதிக எண்ணிக்கையிலான EPF உறுப்பினர்கள், ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்த பணம், ஓய்வூதியப் பலன்களுக்கு மேல் கிடைக்காது என்ற குழப்பத்தில் இருப்பதையும் அமைச்சகம் கவனித்தில் கொண்டிருக்கிறது.
இது குறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஓய்வூதியத் தொகை அதன் உறுப்பினர்களுக்கே உரியது என்பது அரசின் கருத்து. இந்த இக்கட்டான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர, தேவையான சீர்திருத்தங்களுடன், ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து ஓய்வூதியம் பெறுவதையும், அவர்கள் இறந்த பிறகு, கணவன் அல்லது மனைவி குடும்ப ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இருவரின் மரணத்திற்குப் பிறகு, மீதமுள்ள ஓய்வூதிய நிதி அவர்கள் பரிந்துரை செய்யும் வாரிசுக்கு வழங்கப்படும்" என்றார்.
EPS வடிவத்தில் மாற்றம் கொண்டுவந்த பிறகு, ஓய்வூதியத் திட்டத்தின் மீதான நம்பிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அமைச்சகம் நம்புகிறது. இதைபற்றி தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகிய இரண்டும் பேசிவருகின்றன. தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை மறுபரிசீலனை செய்வதாக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஒருபுறம் மக்கள் EPF இன் கீழ் அதிக ஓய்வூதியம் பெறத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், பலர் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும் குறைந்த ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்பதும் அவசியமாக உணரப்படுகிறது. இதனால், நீண்ட சேவை காலத்தை ஓய்வூதிய உயர்வுக்கான ஒரு காரணியாக மாற்றுவது அவசியம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச பென்ஷன் மாதத்திற்கு 1000 ரூபாய் மட்டுமே. இது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கௌரவமான அளவுக்கு பென்ஷன் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.