Gold Monetisation : 25,000 டன் தங்கம் இந்திய வீடுகளில்.. அதில் 5% வந்தாலே பெரிய மாற்றம் வரும்!

Published : May 12, 2026, 03:53 PM IST

இந்தியர்களின் வீடுகளில் உள்ள 25,000 டன் தங்கத்தை பொருளாதாரத்திற்குப் பயன்படுத்தும் தங்கப் பணமாக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், தங்க இறக்குமதியைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.

PREV
15
வீடுகளில் இருக்கும் தங்கம்

இந்தியர்களின் வீடுகளில் பல தலைமுறைகளாக பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தங்கப் பணமாக்கும் திட்டம்’ மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இந்தத் திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லர் சங்கங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை சரியாக சந்தைக்கு கொண்டு வந்தால், சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை பொருளாதாரச் சுழற்சிக்குள் கொண்டு வர முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

25
பிரதமர் மோடி வேண்டுகோள்

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு எதிர்வினையாக, நகைத் துறையை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று தங்க நகை வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக நாட்டில் சுமார் 3.5 கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கத் தொழிலுடன் இணைந்துள்ளனர். எனவே தங்க வாங்குதலை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, பழைய தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

35
25,000 டன் தங்கம்

2015ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்தின் கீழ், மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கான வட்டி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, வெறும் 38 டன் தங்கம் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாகக் கணக்கிடப்படும் நிலையில் இது மிகவும் குறைவான அளவாகப் பார்க்கப்படுகிறது. பரம்பரை நகைகளை உருக்கி வங்கியில் ஒப்படைக்கும் குடும்பங்கள் தயங்குவது, வருமான வரித்துறை சோதனை பற்றிய அச்சம் மற்றும் சிக்கலான விதிமுறைகள் போன்றவை எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

45
நகை வியாபாரிகள் அதிரடி யோசனை

இந்த பிரச்சினைக்கு தீர்வு, அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகளையே தங்க சேகரிப்பு மற்றும் தூய்மை பரிசோதனை மையங்களாக மாற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் நகைகளை உருக்காமல் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கி அதற்கேற்ப வட்டி வழங்கும் முறையையும் அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தாமாக முன்வந்து தங்க விவரங்கள் அறிவிப்பவர்களுக்கு வருமான வரித்துறை சோதனையில் இருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

55
தங்க இறக்குமதி குறைவு

நாட்டில் உள்ள தங்கத்தில் வெறும் 5 சதவீதத்தைக் கூட இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிந்தால், அது இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்க இறக்குமதி குறைந்தால், வெளிநாட்டு செலவினமும் குறையும். இதனால் ரூபாயின் மதிப்பு வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வீடுகளில் சும்மா கிடக்கும் தங்கம், நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடாக மாறினால், அது பொருளாதாரத்திற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories