
இந்த பண்டிகை காலத்தில், தங்கத்தில் முதலீடு செய்வதை புத்திசாலித்தனமான செயல்தான். மங்களகரமான விசேஷ நாட்களில் தங்கம் வாங்குவது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கம். எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள், தங்கம் மற்றும் பிற ஆடம்பரமான பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் தங்கம் வாங்குவது செல்வம் பெருக வழிவகுக்கும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்குவது அதிகரித்துள்ளது. பண்டிகை வரும்போது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சில மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தெரிந்துகொள்ளலாம்.
அரசாங்கம் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது. ஆனால், அவை உடனடியாகக் கிடைக்காது. அரசு அவ்வப்போது தங்க பத்திர விற்பனையை அறிவிக்கும். இது வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே நடக்கும். மேலும் தங்க பத்திர விற்பனை சுமார் ஒரு வாரத்திற்குத்தான் இருக்கும். தங்கப் பத்திரம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான புதிய தங்க பத்திர விற்பனையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
ஆன்லைன் தளங்கள் மூலம் "டிஜிட்டல் தங்கம்" விற்பனைக்கு உள்ளது. டிஜிட்டல் தங்கத்தை வாங்க வாடிக்கையாளர்கள் Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்க்குக்கூட தங்கத்தை வாங்கலாம். தங்கத்தை விற்பனை செய்வதற்காக, பெரும்பாலான பெமெண்ட் செயலிகள் SafeGold அல்லது MMTC-PAMP உடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது பொதுத்துறை நிறுவனமான MMTC மற்றும் சுவிட்சர்லாந்து அமைப்பான PAMP SA இணைந்து செயல்படுத்தும் கூட்டு முயற்சியாகும்.
நகைக்கடைகள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்கள் கூட தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. ஒவ்வொரு நாணயமும் BIS வழிகாட்டுதல்களின்படி ஹால்மார்க் செய்யப்படும். 0.5 முதல் 50 கிராம் வரை எடையுள்ள தங்க நாணயங்களை வாங்கலாம். தங்க நாணயங்களை சேதப்படுத்தாத பேக்கேஜிங்கில் வாங்குவது முக்கியம். பேக்கேஜிங் சேதம் அடைந்திருந்தால் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை 99.5% தூய்மையான தங்கக் கட்டியில் முதலீடு செய்வது தங்க ஈ.டி.எஃப். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் திறந்தநிலை கட்டமைப்பைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள் தங்க ஈ.டி.எஃப் என அழைக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்க ஈ.டி.எஃப். பண்டுகளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.
பல நகைக்கடைக்காரர்கள் கவர்ச்சிகரமான தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் சேமிப்புத் திட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். கால அவகாசம் முடிந்ததும், டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகைக்கும், போனஸுக்கும் சேர்த்து அதே நகைக்கடையில் தங்கம் வாங்கிக்கொள்ளலாம்.
தங்கத்தில் முதலீடு செய்ய நகைகளை வாங்கினால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, அணிந்து அணிந்து காலப்போக்கில் அவை பழசாகிவிடுவது போன்றவை குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். மேலும், செய்கூலி, சேதாரம் என்று இதர கட்டணங்கள் காரணமாக தங்க நகைகளின் விலை அதிகமாக இருக்கிறது. வாங்கும் தங்க நகைகளின் வகையைப் பொறுத்தும் தயாரிப்பு செலவு மாறுபடும். தங்க நகைகள் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருந்தால் செய்கூலி குறிப்பிடத்தக்க அளவு செலவை அதிகரிக்கும். எனவே நகைகளுக்கு மாற்றாக உள்ள தங்க முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது சிறப்பான வழியாக இருக்கும்.