தங்கம், வெள்ளி என்ற பாரம்பரிய முதலீடுகளைத் தாண்டி, முதலீட்டாளர்கள் தற்போது செம்பு மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2025-ஆம் ஆண்டு கமாடிட்டி சந்தையில் அமைதியாக ஆனால் வலுவாக முன்னேறிய செம்பு, 2026-லும் தனது பயணத்தைத் தொடரும் என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்கள் அதிகரிக்கும் சூழலில், செம்புக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு செம்பு குறிப்பிடத்தக்க லாபத்தை அளித்துள்ளது. Multi Commodity Exchange of India-ல் 2025-ல் மட்டும் செம்பின் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்தது. கிலோவுக்கு ரூ.796 என்ற நிலையில் இருந்த விலை ரூ.1,197 வரை சென்றது. இந்த செயல்திறன், பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான NIFTY 50-யை விட சிறந்ததாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையிலும் 2026 ஜனவரி முதல் வாரத்தில் ஒரு டன்னின் விலை சுமார் 13,000 டாலர் அளவில் நிலவி வருகிறது.