சிவில் சர்வீஸ் கனவை விட்டுவிட்டு... ரூ.3 லட்சத்தில் தொடங்கிய டீக்கடை இன்று ரூ.100 கோடி பிசினஸ்; அசத்தும் 3 நண்பர்கள்!

Published : Oct 12, 2026, 10:26 AM IST

பாரம்பரிய மண் குவளையில் தேநீர் வழங்கித் தொடங்கி இந்தியா மட்டுமின்றி கனடா, நேபாளம், யுஏஇ உள்ளிட்ட நாடுகளிலும் 650+ கிளைகளுடன் விரிவடைந்து, ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் பிரம்மாண்ட வர்த்தக சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.

PREV
14
ஐ.ஏ.எஸ் கனவை விட்டுவிட்டு தொடங்கிய டீக்கடை

இந்தியாவில் பலருக்கும் ஒரு கோப்பை தேநீர் என்பது வெறும் அன்றாடப் பழக்கம் மட்டுமே. ஆனால், இந்தூரில் சேர்ந்த 3 நண்பர்களுக்கு அந்த எளிய தேநீரே உலகளவில் 650-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ஒரு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தின் அடித்தளமாக மாறியுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த அனுபவ் துபே (Anubhav Dubey) மற்றும் ஆனந்த் நாயக் (Anand Nayak) இருவரும் அரசுப் பணி கனவை விடுத்து, தொழில்முனைவோர் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் இவர்களுடன் ராகுல் படிதார் (Rahul Patidar) இணைந்தார். இந்த மூவரும் இணைந்து வெறும் ரூ.3 லட்சம் முதலீட்டில் 2016-ம் ஆண்டு இந்தூரில் தொடங்கிய 'சாய் சுட்டா பார்' (Chai Sutta Bar), இன்று ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

24
செகண்ட் ஹேண்ட் போன்களில் தொடங்கி தேநீர் வரை...

உணவு மற்றும் பானங்கள் துறையில் இறங்குவதற்கு முன்பு, இந்த நண்பர்கள் பழைய (செகண்ட் ஹேண்ட்) செல்போன்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இணைந்து புதிய தொழில் தொடங்க திட்டமிட்டபோது, இந்தியர்களின் உணர்வுகளோடு கலந்த தேநீரையே தங்கள் தொழிலின் மையப்புள்ளியாகத் தேர்ந்தெடுத்தனர். இந்தியப் பாரம்பரிய கலாச்சாரத்துடன் கூடிய மலிவு விலையிலான உணவு, பானங்களை வழங்குவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும், 'சாய் சுட்டா பார்' என்ற பெயர் இருந்தாலும், இவர்களது கஃபேக்களுக்குள் புகைப்பிடிக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய களிமண் குவளையில் தரப்படும் 'குல்ஹத் டீ' (Kulhad Chai) இவர்களது பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்த்தது. நாளடைவில் வழக்கமான தேநீருடன் துளசி, இஞ்சி, சாக்லேட் மற்றும் கேசர் (குங்குமப்பூ) உள்ளிட்ட பல சுவைகளில் டீ அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் பாஸ்தா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளும் மெனுவில் சேர்க்கப்பட்டன.

34
'சாய் சுட்டா பார்' வருவாய் ஈட்டும் ரகசியம்

மக்களுக்கு மலிவு விலையில் வழங்குவதே இவர்களின் பிசினஸ் மாடலின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஒரு கப் தேநீர் வெறும் ரூ.15-க்கும், காபி ரூ.20 முதலும் விற்கப்படுகிறது. கோல்ட் காபி மற்றும் ஷேக்குகள் ரூ.70 முதல் கிடைக்கின்றன.

நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்த ஃபிரான்சைஸ் (Franchise) முறையைப் பின்பற்றியது. கிளைகள் தொடங்குவதற்கு முன் ஃபிரான்சைஸ் எடுப்பவர்களுக்கு 15 நாட்கள் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் நிறுவனம் தனது சொந்த செலவில் மட்டுமே கிளைகளைத் திறக்காமல், மிகக் குறுகிய காலத்தில் நாடு முழுவதும் கிளைகளைப் பெருக்க முடிந்தது.

44
இந்தூரில் இருந்து சர்வதேச சந்தைக்கு...

2016-ல் இந்தூரில் ஒரே ஒரு சிறிய கடையுடன் தொடங்கிய இந்நிறுவனம், இன்று சர்வதேச அளவில் 650-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி கனடா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய வெளிநாடுகளிலும் தனது கிளைகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.

3 நண்பர்கள், ஒரு சிறிய ஐடியா, வெறும் ரூ.3 லட்சம் முதலீட்டில் தொடங்கி இன்று ரூ.100 கோடி மதிப்பிலான பிராண்டாக உயர்ந்துள்ள 'சாய் சுட்டா பார்' வெற்றிப் பயணம் இளம் தொழில்முனைவோருக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories