Chandni Chowk Bazaar in Delhi: இந்தியாவின் பழமையான மார்க்கெட்டைப் பார்க்க ஆசையா? சாப்பாட்டுல இருந்து ஷாப்பிங் வரை அங்கே கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார் எங்கே இருக்கிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க.
இப்போதெல்லாம் ஷாப்பிங் என்றாலே பெரிய ஷாப்பிங் மால்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையான ஷாப்பிங் அனுபவத்திற்கு, இது போன்ற பஜார்களுக்குத்தான் செல்ல வேண்டும். நம்ம நாட்டில் 350 வருடமாக இயங்கும் ஒரு பழமையான பஜார் இருக்கிறது. இங்கு கிடைக்காத பொருளே இல்லை. தெருவோர உணவுகள் முதல் உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். அந்த பஜார் எங்கே இருக்கிறது, அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த பஜாரின் பெயர் சாந்தினி சவுக். இது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. 1650-ல், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து ஷாஜஹானாபாத்திற்கு (பழைய டெல்லி) மாற்றினார். அப்போது, தனது மகள் ஜஹனாரா பேகத்துடன் சேர்ந்து இந்த சிறப்புமிக்க சந்தையை அவர் நிறுவினார்.
இதை அரைவட்ட வடிவில் வடிவமைத்தது ஒரு சிறப்பு. இந்த சந்தையின் வழியாக யமுனை நதியின் கிளை நதி ஓடியது. அந்த நீரில் சந்தையின் நிழல் நிலா வெளிச்சத்தில் தெரிவதால், இதற்கு 'சாந்தினி சவுக்' (நிலவொளி சதுக்கம்) என்று பெயர் வந்தது. இந்த சந்தை 40 கஜ அகலமும், 1520 கஜ நீளமும் கொண்டது. ஆரம்பத்தில், இங்கு வெள்ளி வியாபாரிகள் அதிகமாக இருந்ததால், இதை 'சில்வர் ஸ்ட்ரீட்' என்றும் அழைத்தார்கள்.
இந்த சந்தை பல சிறப்புகளைக் கொண்டது. 1739-ல் கர்னால் போரின்போது நாதிர் ஷா இந்த சந்தையைக் கொள்ளையடித்தார். 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின் போது சந்தையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இத்தனை பாதிப்புகளுக்குப் பிறகும், இந்த சந்தை இன்றும் உயிர்ப்புடன் காணப்படுகிறது. ஆனால், கட்டப்பட்டபோது இருந்த அரைவட்ட வடிவம் இப்போது இல்லை. இங்கு மசாலாப் பொருட்கள், உலர் பழங்கள், மூலிகைகள், கிராம்பு போன்றவை அதிகளவில் விற்கப்படுகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய மசாலாப் பொருட்கள் சந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தினங்கள், தங்கம், வெள்ளி, வைரம், முத்துக்கள் போன்றவற்றை விற்கும் நோக்கத்தில்தான் இந்த சந்தை முதலில் உருவாக்கப்பட்டது. அதனால்தான், இன்றும் திருமண நகைகள் வாங்க பலர் இங்கு வருகிறார்கள். இவை மட்டுமல்லாமல், குறைந்த விலையில் ஆடைகள், வளையல்கள், புடவைகள், லேஸ்கள் என இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. வீட்டு அலங்காரப் பொருட்கள் முதல் விதவிதமான உணவுகள் வரை அனைத்தும் இங்கே கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.