ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

First Published | Aug 28, 2023, 2:34 PM IST

ஆதார் எண்ணை மட்டும் வைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடலாம் என்று பலருக்கும் அச்சம் உள்ளது. அவர்களுக்கு நிபுணர்கள் கொடுக்கும் பதில் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆதார் அட்டை

பல்வேறு பணப் பரிவர்த்தனைகளில் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பான பணிகளுக்கு அவசியமாக உள்ளது. வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கத் தவறினால் பணம் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ஆதார் பாதுகாப்பு

ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் எண்ணை யாராவது அறிந்திருந்தால், அவர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் ஆப் அல்லது சேவைகளில் ஊடுருவ வாய்ப்பு உண்டா என பலரும் கவலைப்படுகிறார்கள். ஆதார் எண்ணை மட்டும் கொண்டு வங்கிக் கணக்குகளுக்குள் நுழைய முடியாது என்று நிபுணர்கள் உறுதி அளிக்கின்றனர்.

Tap to resize

ஆதார் அட்டை மூலம் ஹேக்கிங்

ஒருவரின் ஆதார் எண்ணை வைத்தே அவர்களின் வங்கிக் கணக்கிற்குள் நுழைய இயலாது என்று இன்டஸ்இண்ட் வங்கியைச் சேர்ந்த அனில் ராவ் தெளிவுபடுத்துகிறார். OTP, பயோமெட்ரிக் அங்கீகாரம், முக அடையாளம் அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாகும். இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் வங்கி கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும்.

சைபர் பாதுகாப்பு

சைபர் குற்றவாளிகள் சொத்து ஆவணங்களில் இருந்து கைரேகைகளை பெற்று மோசடியான பரிவர்த்தனைகளை நடத்தும் நிகழ்வுகள் வெளிவந்துள்ளன. போலி கைரேகைகளைப் பயன்படுத்தி நடைபெறும் ஆதார் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை ஆதார் ஆணையம் உருவாக்கியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதார் கட்டண முறை

பாதுகாப்பை மேம்படுத்த, ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைரேகை அடிப்படையிலான ஆதார் அங்கீகாரத்தின்போது போலி கைரேகைகள் பயன்படுத்தப்படுவதை மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தடுத்துவிடும்.

ஆதார் லாக்

ஆதாரை அடிக்கடி பயன்படுத்தவில்லை எனில், ஆதார் கார்டை லாக் (lock) செய்து வைக்கும் வாயப்பை ஆதார் ஆணையம் வழங்குகிறது. ஆதார் இணையதளத்தில் கிடைக்கும் இந்த அம்சம், உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்து, தேவையான சமயத்தில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உதவுகிறது. லாக் செய்து வைக்கும்போது ஆதார் பயன்பாட்டில் இருக்காது. அப்போது அதனை தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும்.

Latest Videos

click me!