ரசாயன புகாரைத் தொடர்ந்து பாக்டீரியா சர்ச்சை: பிஸ்லெரி பாட்டிலில் கோலிஃபார்ம் கண்டுபிடிப்பு; FSSAI அதிரடி நடவடிக்கை!

Published : Nov 29, 2026, 10:01 PM IST

இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி (Bisleri) தயாரித்த குடிநீர் மாதிரியில் 'கோலிஃபார்ம்' பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டு பாதுகாப்பற்றது என FSSAI அறிவித்துள்ளது.

PREV
14
பிஸ்லெரி குடிநீர் மாதிரியில் பாக்டீரியா கண்டுபிடிப்பு

பயணங்களின்போதும், உணவகங்களிலும் தாகம் எடுத்தால் நாம் தயக்கமின்றி வாங்கி அருந்துவது பாட்டில் குடிநீரைத்தான். இந்தியாவில் 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் சந்தையில் கோலோச்சி வரும் முன்னணி நிறுவனமான பிஸ்லெரி (Bisleri) தயாரித்த குடிநீர் மாதிரியில் 'கோலிஃபார்ம்' (Coliform) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனங்கள் கலந்திருந்ததாக பிஸ்லெரி குடிநீர் மாதிரி ஒன்றின் மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சட்ட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள 2-வது புகார் பாட்டில் குடிநீரின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோவா ஆலையைத் தொடர்ந்து மே.வங்க ஆலையிலும் சிக்கல்

இந்தியாவின் மிகப்பெரிய பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் (Bisleri International) அடுத்தடுத்த சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ளது. கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையின் குடிநீர் மாதிரி தொடர்பாக வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்த சில நாட்களிலேயே, தற்போது மேற்கு வங்க மாநில ஆலையில் தயாரிக்கப்பட்ட குடிநீர் விவகாரத்திலும் அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர FSSAI அனுமதி அளித்துள்ளது.

24
மேற்கு வங்க ஆலை PB 201 தொகுப்பில் என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தெலிபாரா கிராமத்தில் பிஸ்லெரி நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 2026-ல் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட PB 201 என்ற தொகுப்பு எண்ணைக் (Batch number) கொண்ட குடிநீர் மாதிரியை FSSAI அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதன்மை ஆய்வகம் மற்றும் பரிந்துரை உணவு ஆய்வகம் (Referral food laboratory) ஆகிய இரண்டிலும் அந்தக் குடிநீரில் 'கோலிஃபார்ம்' (Coliform) பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கழிவுநீர் கசிவு அல்லது சேதமடைந்த குழாய்கள் வழியாக இத்தகைய பாக்டீரியாக்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 12, 2026 அன்று அந்தத் தொகுப்புப் பாட்டில்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் பிஸ்லெரி மீது வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது.

34
கோவா ஆலையில் எழுந்த புரோமேட் & PAHs சர்ச்சை!

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையிலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி தொடர்பான வழக்கிலும் FSSAI வழக்குத் தொடர அனுமதி அளித்திருந்தது. செப்டம்பர் 2025-ல் தயாரிக்கப்பட்ட அந்தக் குடிநீர் மாதிரியில், அனுமதிக்கப்பட்ட 10 மைக்ரோகிராம் அளவை விட அதிகமாக (12 மைக்ரோகிராம்/லிட்டர்) புரோமேட் (Bromate) இருந்ததால் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. பின்னர் பரிந்துரை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டபோதும், அதில் பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது கண்டறியப்பட்டு மீண்டும் பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டது.

44
முரண்பட்ட ஆய்வு முடிவுகள் - மறுஆய்வுக்கு பிஸ்லெரி கோரிக்கை

சனிக்கிழமை (நவ.28) பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், மேற்கு வங்க ஆலையின் PB 201 தொகுப்புப் பாட்டில்களை ஆக.12-ம் தேதியே சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதே தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை FSSAI அங்கீகாரம் பெற்ற 2 தனித்தனி சுயாதீன ஆய்வகங்களில் பரிசோதித்தபோது, அவை கோலிஃபார்ம் பாக்டீரியா மற்றும் இதர அனைத்து உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளையும் பூர்த்தி செய்ததாக நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, அரசு ஆய்வக முடிவுகளுக்கும் சுயாதீன ஆய்வக முடிவுகளுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு குறித்து FSSAI முழுமையான மறுஆய்வு செய்ய வேண்டும் என பிஸ்லெரி கோரிக்கை விடுத்துள்ளது. கோவா ஆலை விவகாரத்திலும், தாங்கள் சமர்ப்பித்த சுயாதீன ஆய்வக முடிவுகளுக்குப் பிறகு எந்தப் பதிலும் வராததால் அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகக் கருதியதாகவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

போலி குடிநீர் நிறுவனங்களுக்கும் கிடுக்கிப்பிடி!

பிஸ்லெரி மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாட்டில் குடிநீர் நிறுவனங்களிடமிருந்தும் சீரற்ற முறையில் (Random samples) மாதிரிகளைச் சேகரித்து FSSAI சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதைவிட முக்கியமாக, பிரபலமான பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் லேபிள்களைப் போலவே (Lookalike names and labelling) அச்சு அசலாகப் போலியான பெயர்களில் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க FSSAI களமிறங்கியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories