வங்கி பிக்சட் டெபாசிட்கள் பாதுகாப்பானவை என்றாலும் குறைந்த வட்டியையே வழங்குகின்றன. இதற்கு மாறாக, NBFC-களின் கார்ப்பரேட் FD-க்கள் 8.85% வரை அதிக வட்டி தருகிறது. இதுதொடர்பான முழுமையான விபரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
எதிர்கால சேமிப்பை பாதுகாப்பாக வளர்க்க நினைப்பவர்கள் பெரும்பாலும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டைத் தான் முதலில் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில், இந்த முதலீடு வட்டி வருமானத்தையும், முதலீட்டுத் தொகை பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் வழங்குவதால் பலர் இதை நம்பிக்கையாகக் கருதுகின்றனர். சேமிப்பை அதிகரித்து நிலையான வருமானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் பலரும் தங்கள் பணத்தை FD-ஆக மாற்றுவது இன்றளவு தொடர்கிறது.
24
பிக்சட் டெபாசிட்
ஆனால் பிக்சட் டெபாசிட் செய்வதற்கு முன்பு எந்த வங்கி அல்லது நிறுவனம் அதிக வட்டி வழங்குகிறது என்பதை அறிந்திருப்பது முக்கியம். தற்போது பெரிய வங்கிகள் 6.5%-7.5% மட்டுமே வட்டி தருகின்றன. அதே நேரத்தில், சில சிறிய நிதி வங்கிகள் மற்றும் NBFC-க்கள் அதிக வட்டியை வழங்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான FD-க்களில் வட்டி அதிகரித்துள்ளது. அவர்கள் பொதுவாக 0.25%-0.50% கூடுதல் வட்டியைப் பெறுவர்.
34
கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்
கார்ப்பரேட் FD-க்களில் வட்டி விகிதங்கள் இன்னும் உயரமாக உள்ளன. பஜாஜ் ஃபைனான்ஸ் 7.30%, சுந்தரம் ஃபைனான்ஸ் 7.50%, மணிப்பால் ஹவுசிங் ஃபைனான்ஸ் 8.50%, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 8.65% மற்றும் முத்தூட் கேபிடல் 8.85% வரை வட்டி வழங்குகின்றன. இந்த உயர்ந்த வட்டி காரணமாக பல முதலீட்டாளர்கள் NBFC-களின் FD-க்களை நாடுகின்றனர். ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஆபத்தையும் கவனிக்க வேண்டும்.
வங்கிகளில் FD செலுத்தும்போது DICGC என்பதன் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது; ஆனால் கார்ப்பரேட் FD-க்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லை. எனவே NBFC சிக்கலில் சிக்கினால் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் CRISIL, ICRA, CARE போன்ற நிறுவனங்களால் AAA அல்லது AA மதிப்பீடு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிக வருமானம் வேண்டும், சிறிய ஆபத்தை ஏற்கத் தயார் என்று நினைப்பவர்களுக்கு கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட் ஒரு தேர்வாக இருக்கலாம்; ஆனால் முழு பாதுகாப்பு விரும்புவோருக்கு வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் அரசு திட்டங்கள் சிறந்தவை ஆகும்.