பொதுமக்களிடையே மர வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடந்த 2018-ல் அறிமுகமானது தான் 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்'. இதன் பெயரைப் போலவே மரங்கள் சார்ந்த அனைத்து விதமான தகவலையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறது இந்த செயலி.
நம்ம ஊர் விவசாயிகள் மற்றும் பாமரமக்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த செயலி மரம் வளர்ப்பு குறித்து அத்தனை தகவல்களையும் தமிழில் தருகிறது. மண் சார்ந்த மரம் எது? அது எந்த மண்ணில் வளரும்? எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும்? என்பதை போன்ற பண்ணையம் சார்ந்த கேள்விக்களுக்கு இந்தச் செயலி முழுமையான தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.
தமிழக மரங்கள், மாநில மரங்கள், உள்நாட்டு மரங்கள், வெளிநாட்டு மரங்கள் என எல்லாவற்றையும் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதேபோல் மரங்கள், மரங்களின் புகைப்படங்கள், மரங்கள் வளர்க்கும் முறை, விதைப்பந்து, மானியம், அரசு திட்டங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தெளிவான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் மரங்கள் குறித்து புதிதாக தெரிந்துகொள்வோருக்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும். மரங்களை எந்த காலத்தில் வளர்க்கலாம், நடவு செய்யும் முறை, கவாத்து அவசியமா, கன்றுகளை எப்படி உருவாக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த ஆப்பில் இருக்கின்றன. கூகுள் ப்ளே ஸ்டோரில் மரம் தமிழ் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டால் கிடைக்கிறது இந்த அற்புதமான செயலி.