இதன் அடுத்த அதிர்ச்சி ஏற்றுமதி சந்தையில் தெரிகிறது. இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2026 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில் 10.52 சதவீதம் குறைந்து 4.95 பில்லியன் டாலராக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 4.48 சதவீதம் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் சில பிரிவுகள் வளர்ச்சியை பதிவு செய்தாலும், ஆயத்த ஆடைத் துறை தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. அதிக உற்பத்திச் செலவு, கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிக்கல்கள், வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரே நேரத்தில் சவாலாக உள்ளன.
இதனால் அடுத்ததாக எழும் கேள்வி மிகவும் நேரடியானது. ஆடைகளின் விலை இனி உயருமா? மூலப்பொருட்களின் விலை நீண்ட காலத்திற்கு இதேபோல் அதிகமாக இருந்தால், உற்பத்தியாளர்களும் ஆடை பிராண்டுகளும் கூடுதல் செலவின் ஒரு பகுதியையாவது வாடிக்கையாளர்களிடம் மாற்ற வேண்டிய சூழல் உருவாகலாம். குறிப்பாக பாலியஸ்டர் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், செயற்கை நார் பயன்படுத்தப்படும் ஆடைகளில் அதன் தாக்கம் முதலில் தெரிய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், விலையை அதிகமாக உயர்த்தினால் மக்கள் ஆடை வாங்குவதை தள்ளிப்போடலாம். இதனால் நிறுவனங்களும் முழு செலவு உயர்வையும் வாடிக்கையாளர்களிடம் மாற்ற முடியாத நிலை.
எனவே, ஈரான் போர் உருவாக்கிய இந்த நெருக்கடியை ஒரு சாதாரண மூலப்பொருள் விலை உயர்வாக மட்டும் பார்க்க முடியாது. கச்சா எண்ணெயில் இருந்து தொடங்கும் தாக்கம் பாலியஸ்டர், நூல், சாயம், ஆடை உற்பத்தி, போக்குவரத்து என பல கட்டங்களை கடந்து இறுதியில் விற்பனை வரை செல்லக்கூடியதாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் போன்ற ஏற்றுமதி மையங்களுக்கு உற்பத்திச் செலவு உயர்வும் வெளிநாட்டு தேவை குறைவதும் ஒரே நேரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பாலியஸ்டர் விலை உயர்வு நீடித்தால், இனி ஆடைகளின் விலை மட்டும் அல்லாமல் உலக ஜவுளி சந்தையின் தேவை மற்றும் விற்பனை போக்கு மாறக்கூடும் என்பதே தொழில்துறையின் முக்கிய கவலையாக உள்ளது.