Aadhaar No Longer Mandatory: ஆதார் இல்லையா? கவலை வேண்டாம்! இனி இந்த 6 ஆவணங்கள் இருந்தாலே போதும்!

Published : Nov 17, 2026, 09:38 AM IST

ஆதார் அட்டை இனி கட்டாயமில்லையா? ஆதார் இல்லாமல் அரசு சேவைகளைப் பெற மாற்று அடையாள ஆவணங்களுக்கு அனுமதி அளித்துள்ள டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் புதிய நடைமுறைகள், ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள், பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள்!

PREV
15
கைரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலோ என்ன செய்வது?

ஒரு அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள்... அங்கே ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் முதலில் கேட்கப்படுவது ஆதார் அட்டையாக இருக்கிறது. ஆதார் எண் இல்லை என்றாலோ, கைரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலோ என்ன செய்வது? அரசு வழங்கும் சேவையைப் பெற முடியாமல் திரும்ப வேண்டுமா? இனி அப்படியொரு நிலை இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது டெல்லி அரசு.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்கும் மாற்று அடையாள ஆவணங்கள் மூலம் அரசு சேவைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படியானால், இனி ஆதார் அட்டை தேவையில்லையா? வாக்காளர் அடையாள அட்டை மட்டும் போதுமா? தமிழகத்திலும் இதே நடைமுறை வருமா? மற்ற மாநிலங்களில் என்ன நிலை? விரிவாகப் பார்க்கலாம்.

25
ஆதார் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு – டெல்லி அரசின் முடிவு என்ன?

டெல்லி அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அரசாணையின்படி, Unified Citizen Data Platform (UCDP) தளத்தில் ஆதார் அங்கீகாரம் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதாவது, ஆதார் அட்டையைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் ஆதார் சரிபார்ப்பை முடிக்க முடியாதவர்கள் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதற்காக அரசு அனுமதித்துள்ள மாற்று ஆவணங்கள்:

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID). - ஓட்டுநர் உரிமம் (Driving Licence). - பாஸ்போர்ட். - மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய பிற புகைப்பட அடையாள அட்டைகள். முக்கியமாக, ஆதார் அங்கீகாரத்தை மறுப்பதற்காகவோ, ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியாத காரணத்திற்காகவோ சம்பந்தப்பட்ட சேவையை மறுக்கக்கூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் சரிபார்ப்புக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டெல்லி அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு சேவைகளுக்கும் ஆதார் தேவையில்லை என்று அறிவிக்கும் உத்தரவு கிடையாது. குறிப்பாக, இந்த அறிவிப்பு UCDP தளத்தில் மேற்கொள்ளப்படும் ஆதார் அங்கீகாரத்திற்குப் பொருந்தும்

35
மற்ற மாநிலங்களில் என்ன நிலை?

டெல்லியின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஆதார் சரிபார்ப்புக்கு மாற்று அடையாள ஆவணங்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு துறையிலும் நடைமுறைகள் வேறுபடுகின்றன.

தமிழ்நாடு: தமிழகத்திலும் இதுதொடர்பாக முக்கியமான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜூன் 3-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் தமிழ்நாடு சிங்கிள் சைன்-ஆன் (TNSSO) சேவைகளில் ஆதார் அங்கீகாரம் விருப்பத் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்தலாம். ஆதார் சரிபார்ப்பை மறுத்தாலும் அல்லது மேற்கொள்ள முடியாவிட்டாலும் இந்த அறிவிப்பின் கீழ் சேவையை மறுக்கக்கூடாது.

மகாராஷ்டிரா: 2026 அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சமூக நீதி மற்றும் சிறப்பு உதவித் துறையின் குறிப்பிட்ட சேவைகளில் ஆதார் சரிபார்ப்பு விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். வங்கி அல்லது அஞ்சலகப் புத்தகம், வாக்காளர் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மாற்று ஆவணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா: அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான பணியாளர் தரவுத்தளப் பதிவு தொடர்பான குறிப்பிட்ட சேவையில் ஆதார் சரிபார்ப்பு விருப்பமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்: நகராட்சி சான்றிதழ்கள், உரிம அனுமதிகள், வரி தொடர்பான சேவைகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் சேவைகளில் ஆதார் சரிபார்ப்பு விருப்ப அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

45
ஆதார் அட்டை எப்போதுமே தேவையில்லையா?

இங்குதான் பொதுமக்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் உள்ளது. ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் கட்டாயமில்லை என்றாலும், குறிப்பிட்ட அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு சட்ட விதிகளின்படி ஆதார் தேவைப்படலாம்.

ஆதார் சட்டம் 2016-ன் பிரிவு 7-ன்படி, மத்திய அல்லது மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் குறிப்பிட்ட மானியங்கள், நலத்திட்டப் பலன்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாளச் சரிபார்ப்பைக் கோர முடியும். அதேநேரத்தில், ஆதார் எண் ஒதுக்கப்படாதவர்களுக்கு மாற்று அடையாள வழிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது கைரேகை சரிபார்ப்பில் தோல்வி ஏற்பட்டாலும் மாற்று அடையாள முறைகளை வழங்குவதற்கான விதிகளும் உள்ளன.

55
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

டெல்லி அரசின் அறிவிப்பு, தமிழகத்தின் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டுகின்றன. அரசு சேவைகளைப் பெறுவதில் ஆதார் சரிபார்ப்பு மட்டுமே ஒரே வழியாக இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், ஆதார் அட்டையைத் தூக்கி எறிந்துவிடலாம் என்றோ, இனி எந்த அரசு அலுவலகத்திலும் ஆதார் கேட்கப்படாது என்றோ இதற்குப் பொருள் கிடையாது. எந்தத் துறையின் எந்தச் சேவைக்கு எந்த அடையாள ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை அந்தந்த அரசாணை மற்றும் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தெரிந்துகொள்வது அவசியம்.

மொத்தத்தில், ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் அரசு சேவைகளைப் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories