
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை; ஆனால் அதை பாதுகாத்து வளர்ப்பது ஒரு கலை. பலர் சம்பளம் அதிகரித்தாலும், செலவையும் அதிகரித்து விடுகிறார்கள். இறுதியில், எவ்வளவு சம்பாதித்தாலும் “பணம் போதவில்லை” என்ற குறைவே மேலோங்கும். ஆனால் சிலர் குறைவான வருமானத்திலேயே கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய ரகசியம் நிதி ஒழுக்கம், கட்டுப்படுத்தப்பட்ட செலவுகள், முதலீட்டில் முன்னுரிமை. இந்த மூன்று பழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றினால், யாரும் நிதி சுதந்திரம் பெற்று, செல்வந்தராகலாம்.
நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதல்ல, அதை எப்படி செலவிடுகிறீர்கள் என்பதே உங்கள் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட செலவு என்பது, வருமானத்தைத் திட்டமிட்டு பிரித்து பயன்படுத்துவது. இதற்கான சிறந்த வழி குடும்ப பட்ஜெட் உத்தி. இந்த உத்தி படி, உங்கள் மாத வருமானத்தை மூன்று பிரிவுகளாகப் பிரியுங்கள்.
இந்த முறையின் நன்மை என்னவெனில், சம்பளம் அதிகரித்தால், ஆசைச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முதலீட்டு தொகை மட்டுமே அதிகரிக்கும். இதனால், உங்கள் செல்வம் வருடா வருடம் தானாகவே பெருகும். மேலும், மாதந்தோறும் செலவுகளை ஒரு நோட்டுப் புத்தகம் அல்லது மொபைல் ஆப்ஸில் பதிவு செய்யுங்கள். செலவு கண்காணிப்பு இல்லாமல், பட்ஜெட்டும் பலனளிக்காது. பணம் இருக்கிறது என்பதற்காக செலவிட வேண்டாம்; தேவைப்பட்டால் மட்டுமே செலவு செய்யுங்கள்.” இப்படி செயல்பட்டால், தேவையற்ற கடன்களிலிருந்து விலகி, வருங்காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேமிக்க முடியும்.
சேமிப்பு என்பது உங்கள் பணத்தை பாதுகாப்பது; முதலீடு என்பது உங்கள் பணத்தை வளர்ப்பது. பணம் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தால், அது மிகக் குறைந்த வட்டியை மட்டுமே தரும். ஆனால் சரியான முதலீடு, காலப்போக்கில் உங்கள் செல்வத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். முதலீட்டின் சிறந்த வழிகளில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. (Systematic Investment Plan). இதில், மாதந்தோறும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முதலீடு செய்வீர்கள். இந்த திட்டத்தை ஸ்டெப்-அப் எஸ்.ஐ.பி.-ஆக மாற்றினால், ஆண்டுதோறும் 5%–10% முதலீட்டு தொகையை அதிகரிக்க முடியும். மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு ரூ.11,000 ஆக உயர்த்துங்கள். சிறிய உயர்வுகள் கூட, 10–15 ஆண்டுகளில் கோடிகள் வருமானத்தை உருவாக்கும். முதலீட்டைத் தேர்வு செய்வதில், உங்கள் நிதி இலக்குகளை (குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், ஓய்வு வாழ்க்கை) முன்னிட்டு தேர்வு செய்யுங்கள். உயர் அபாயம் – உயர் வருமானம், குறைந்த அபாயம் – நிலையான வருமானம் என்ற சமநிலையை வைத்துக் கொள்ளுங்கள். முதலீடு செய்யாமல் செல்வந்தராக முடியாது.சம்பள உயர்வில் செலவைக் குறைத்து, முதலீட்டை அதிகரித்தால், பணம் உங்களுக்காக உழைக்கத் தொடங்கும்.
நிதி ஒழுக்கம் என்பது, எப்போது, எதற்காக பணம் செலவிட வேண்டும் என்பதை அறிதல். பணம் இருக்கிறது என்பதற்காக வாங்குவது செல்வத்தை குறைக்கும் முக்கிய காரணம். புதிய செலவுகள் செய்யும் முன், இது உண்மையில் தேவையா? என்று மூன்று முறை சிந்தியுங்கள். சம்பள உயர்வைச் சரியாகப் பயன்படுத்துவதும் நிதி ஒழுக்கத்தின் ஒரு பகுதி. உதாரணமாக, ஆண்டுக்கு 15% சம்பள உயர்வில், 5% மட்டும் செலவுக்காக வைத்து, மீதி 10% முதலீட்டில் போடுங்கள். மேலும், தேவையற்ற கடன்களைத் தவிர்க்குங்கள். கிரெடிட் கார்டு செலவுகள் மற்றும் வட்டி கட்டணங்கள், உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை வீணாக்கும். அவசர நிதி (Emergency Fund) வைத்திருப்பது மிக முக்கியம். இது 6 மாத செலவுகளுக்கு சமமாக இருக்க வேண்டும். நிதி ஒழுக்கம் கடைபிடித்தால், உங்கள் வாழ்க்கைத் தரம் குறையாது; மாறாக, பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக, ஓய்வு பெற்ற பிறகும் பணம் இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை வராது.இன்றைய கட்டுப்பாடே, நாளைய செல்வத்தை உருவாக்கும்.
கட்டுப்படுத்தப்பட்ட செலவு, முதலீட்டில் முன்னுரிமை, நிதி ஒழுக்கம் — இந்த மூன்று விஷயங்கள் தான் கோடீஸ்வரன் வாழ்க்கைக்கு சாவி. இவற்றை ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் செல்வம் பெருகி, நிதி சுதந்திரம் உங்களுக்கே வரும்.