பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி தொடங்கப்பட்டது. அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, தனலட்சுமி, ஷெரினா, அசல் கோளாரு, நிவாஷினி, சாந்தி, மகேஸ்வரி, கதிரவன், ராம் ராமசாமி, ஜிபி முத்து, மணிகண்டன், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, குயின்சி மற்றும் மைனா ஆகிய 21 போட்டியாளர்களுடன் அதகளமாக ஆரம்பமானது.
அசல் கோளாறு
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியளர்களான குயின்ஸி, நிவாஷினி, மகேஸ்வரி, ஜனனி ஆகியோரிடம் அசல் கோளாறு அத்துமீறி நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆனது. இதன் காரணமாக அவர் மூன்றாவது வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
அதிக குறும்படம்
பிக்பாஸ் வரலாற்றில் அதிக குறும்படம் போட்ட சீசனாகவும் இது மாறி உள்ளது. இந்த முறை பொம்மை டாஸ்க்கின் போதும், ஏஞ்சல், ஏலியன் டாஸ்க்கின் போதும் கமல் குறும்படம் போட்டுக்காட்டி இருந்தார். இதற்கு முந்தைய சீசன்களில் அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே குறும்படம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகமுறை கேப்டன்
பிக்பாஸ் வரலாற்றில் அதிகமுறை கேப்டன் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை மணிகண்டன் படைத்தார். இவர் இந்த சீசனில் 4 முறை கேப்டனாக இருந்தார். இதற்கு முன் யாஷிகா, சினேகன் ஆகியோர் மூன்று முறை கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்த நிலையில், மணிகண்டன் அதனை முறியடித்தார்.
இரு முறை பணப்பெட்டி
முந்தைய பிக்பாஸ் சீசன்களில் ஒரு முறை மட்டுமே பணப்பெட்டி அனுப்பப்படும். ஆனால் இந்த சீசனில் மட்டும் இரு முறை அனுப்பப்பட்டது. இதில் முதல் முறை கதிரவன் ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அடுத்து வந்த பணப்பெட்டியில் ரூ.11 லட்சம் தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன்.
நோ வைல்டு கார்டு எண்ட்ரி
இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களிலும் ஏதேனும் ஒரு வைல்டு கார்டு எண்ட்ரியாவது இருக்கும். ஆனால் இந்த சீசனில் மட்டும் தான் ஒரு போட்டியாளர் கூட வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்பப்படவில்லை.
போட்டியாளரான பொதுமக்கள்
இந்த சீசனில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முறை பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இருவரை களமிறக்கி இருந்தனர். அவர்கள் தனலட்சுமி மற்றும் ஷிவின். இவர்கள் இருவருமே இந்த சீசனில் டஃப் ஆன போட்டியாளர்களாக விளங்கினர்.
அசீமுக்கு ரெட் கார்டு
பிக்பாஸ் சீசன் 6-ல் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர் என்றால் அது அசீம் தான். அவர் 2-வது வாரத்தில் நடந்த ரேங்கிங் டாஸ்கின் போது விக்ரமன், ஆயிஷா ஆகியோரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனலட்சுமியின் வெற்றி பறிப்பு
பிக்பாஸ் வீட்டில் பேக்கரி டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. அதில் தனலட்சுமியை வெற்றியாளராக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் வார இறுதியில் அவர் மற்றவர்களின் பணத்தை திருடி வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டிய கமல், அவரின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அரசியல் கட்சி தலையீடு
இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விக்ரமன் அரசியல்வாதி என்பதால், அவரை வெற்றிபெறச் செய்ய கடைசி நேரத்தில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனும், அக்கட்சியினரும் வாக்கு சேகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஷிவின் படைத்த சாதனை
பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய திருநங்கை என்கிற சாதனையை படைத்துள்ளார் ஷிவின். கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கை போட்டியாளர் பாதியிலே வெளியேறிய நிலையில், இந்த சீசனில் இறுதி வரை சென்று சாதனை படைத்திருக்கிறார் ஷிவின்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் உள்ளே கதறி அழுத விக்ரமன்! ஏன்... வைரலாகும் வீடியோ!