
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது அடுத்தடுத்த சர்ச்சைகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது டிடிஎஃப் வாசன் மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, முகேஷை தாக்குவதற்காக வாசன் ஆவேசமாகச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
பிக் பாஸ் சீசன் 10 தொடங்கியதிலிருந்து போட்டியாளர்களுக்கு பல்வேறு சவாலான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் சாந்தினி வெளியேறினார். அதேபோன்று எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சை காரணமாக ராகவ்வும் போட்டியிலிருந்து விலகினார்.
இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற டைமண்ட் சேகரிக்கும் டாஸ்க்கில் டிடிஎஃப் வாசனின் செயல்பாடுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அந்த டாஸ்க்கில் அவர் விளையாடிய விதம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டதுடன், அவரது ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்தடுத்த டாஸ்க்குகளிலும் வாசன் தனது திறமையை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தற்போது அவருடைய கோபமே போட்டியில் அவருக்குப் பின்னடைவாக மாறிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சர்வைவல் டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வீடு ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா எட்டு போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கிராசரி டாஸ்க்கில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை கவண் மூலம் குறிவைத்து அடிக்க வேண்டும் என்ற சவால் வழங்கப்பட்டது.
ஆனால், முதல் இரண்டு முயற்சிகளிலும் டாஸ்க் சரியாக நடைபெறாததால் போட்டியாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பிக் பாஸே தலையிட்டு விதிமுறைகளை மாற்றியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு அணியிலிருந்தும் தலா ஒருவர் சென்று விளையாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் இந்த டாஸ்க்கில் ப்ளூ டீம் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
இந்த டாஸ்க்கிற்கு இடையேதான் டிடிஎஃப் வாசன் மற்றும் முகேஷ் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முகேஷ் தன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசியதால் வாசன் ஆத்திரமடைந்து, ஒரு கட்டத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரை நோக்கி அடிக்கப் பாய்ந்தார்.
இது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் வீடியோவில், வாசன் கடும் கோபத்துடன் முகேஷை நோக்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது அருகிலிருந்த மற்ற போட்டியாளர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயற்சித்துள்ளனர். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை வாசன் மீறியுள்ளாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் உடல்ரீதியாகத் தாக்குவது கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது. இதனால் வாசனின் செயல்பாடு குறித்து வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மோதல் காரணமாக வாசனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவலும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இருப்பினும், வாசனுக்கு ரெட் கார்டு வழங்கப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, அவர் வெளியேற்றப்படுவார் என உறுதியாகக் கூற முடியாது. இதற்கிடையில், மோதலுக்குப் பிறகு முகேஷிடம் வாசன் மன்னிப்பு கேட்டதாகவும், அதனை முகேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் சீசன் 10 தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்குச் சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் சிலர் விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில் டிடிஎஃப் வாசனின் வருகைக்குப் பிறகு நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரித்ததாகவும், டிஆர்பியில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
குறிப்பாக, டைமண்ட் டாஸ்க்கில் வாசன் வெளிப்படுத்திய ஆட்டம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது முகேஷுடன் ஏற்பட்டுள்ள மோதல் அவரது பிக் பாஸ் பயணத்திற்கே சிக்கலாக மாறக்கூடும் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஒருபுறம் வாசனுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் பிக் பாஸ் வீட்டில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். முகேஷுடனான மோதலை விஜய் சேதுபதி எப்படிக் கையாளப்போகிறார்? வாசனுக்கு எச்சரிக்கை மட்டும் வழங்கப்படுமா அல்லது ரெட் கார்டு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதுதான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.