ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா, 2025-ல் 1.17 லட்சம் உள்நாட்டு விற்பனையுடன் சாதனை படைத்துள்ளது. மேலும், குழுமம் தனது சேவை மையங்களை 700 ஆக விரிவுபடுத்தியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (SAVWIPL) நிறுவனத்திற்கு 2025ஆம் ஆண்டு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொழில்துறை மீட்சி வலுவாக இருந்ததுடன், பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். இதன் விளைவாக, நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 1.17 லட்சம் யூனிட்கள் என்ற அளவை எட்டியது, ஆண்டு கணக்கில் 36% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. மேலும் உள்நாடு மற்றும் ஏற்றுமதி சேர்த்து மொத்த விற்பனை 1.59 லட்சம் யூனிட்கள் ஆக உயர்ந்துள்ளது. இதோடு, இந்தியாவில் 2 மில்லியன் வாகன உற்பத்தி என்ற முக்கிய மைல்கல்லையும் குழுமம் கடந்துள்ளது.
இந்த முன்னேற்றத்தின் மையமாக, இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்ட MQB-A0-IN பிளாட்ஃபார்ம் அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் மாடல்கள் அனைத்துக்கும் இந்த தளம் அடிப்படையாக உள்ளது. மேலும், குழுமத்தின் ஏற்றுமதி வளர்ச்சியும் கவனத்தை ஈர்க்கிறது. மொத்த ஏற்றுமதி 7.15 லட்சம் யூனிட்களை கடந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்தியா குழுமத்தின் உலகளாவிய உற்பத்தித் தளமாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசி மற்றும் ஆசியான் பகுதிகளில் புதிய சந்தைகளை அடையாளம் கண்டு அங்கு நுழைவதன் மூலம் சர்வதேச அளவிலும் நிறுவனம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது.
22
உள்நாட்டு விற்பனை வளர்ச்சி
பிராண்டுகள் அளவிலும் 2025 ஒரு வலுவான ஆண்டாகவே அமைந்துள்ளது. பிரீமியம் செடான் பிரிவில் ஃபோக்ஸ்வேகன் தனது முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக Virtus மாடல், தனது பிரிவில் 38% ஆண்டு சந்தைப் பங்கை பெற்றுள்ளது. மேலும் Golf GTI-யின் முதல் தொகுதி வெளியான சில நாட்களில் முழுவதும் விற்றுத் தீர்ந்தது என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.
ஸ்கோடா பிராண்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது. 4 மீட்டருக்குள் உள்ள கைலாக் மாடலுக்கான அதிக தேவை மற்றும் Octavia RS மீண்டும் அறிமுகமாகியதும் இதற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஸ்கோடா 107% வளர்ச்சி கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் குழுமத்தின் விற்பனை மற்றும் சேவை தொடர்பு மையங்கள் 700 வரை உயர்த்தப்பட்டுள்ளன.