
தோற்றத்தில் சிறிதாகவும், தனித்துவமான டிசைனும், ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவமும் கொண்ட மினி (MINI) கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பக்கமும் கவனத்தை திருப்பியிருப்பதால், அதற்குத் தக்க மாடல்களைக் கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய வரவாகக் களமிறங்க உள்ள புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ்இ (MINI Cooper SE) எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
2-ம் தலைமுறை கூப்பர் எஸ்இ மாடலுடன், பிரபல பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் பால் ஸ்மித் (Paul Smith) உடனான கூட்டணியில் உருவான சிறப்புப் பதிப்புகளையும் மினி நிறுவனம் வரும் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ்இ காரில் 54.2 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை முறையின்படி 402 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலைவிட பேட்டரி திறனும் பயண தூரமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
இந்த காரில் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 218 எச்பி (hp) பவரையும், 330 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் மூலம் 0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டிவிடும். மேலும், அதிகபட்சமாக மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனையும் இந்த கார் கொண்டுள்ளது.
சார்ஜிங் வசதியைப் பொறுத்தவரை, 95 kW திறன் கொண்ட டிசி (DC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80% வரை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதேபோல், 7.4 kW ஏசி (AC) சார்ஜரைப் பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.5 மணி நேரம் ஆகும்.
வெளிப்புறத் தோற்றத்தில் மினி கார்களுக்கே உரிய வட்ட வடிவ எல்இடி (LED) ஹெட்லைட்டுகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. அதேசமயம், மூடப்பட்ட முன்பக்க கிரில் அமைப்பு, புதிய வடிவிலான பின்பக்க விளக்குகள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் (Flush door handles) ஆகியவை புதிய தலைமுறை மாடலுக்கு நவீன தோற்றத்தை வழங்குகின்றன.
உட்புறத்தில் 9.45 இன்ச் வட்ட வடிவ ஓஎல்இடி (OLED) டச் ஸ்கிரீன் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் வாகனத்தின் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பாரம்பரிய டோகிள் (Toggle) சுவிட்சுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, முன்பக்க இருக்கைகளுக்கு ஹீட்டிங் வசதி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஹெட்-அப் டிஸ்பிளே (Head-up display) உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS) தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பால் ஸ்மித் சிறப்புப் பதிப்பு (Paul Smith Edition)
கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருடன் சேர்த்து, பால் ஸ்மித் எடிஷன் மாடல்களையும் மினி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதில் கூப்பர் எஸ்இ, கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் கன்வெர்டிபிள் ஆகிய 3 மாடல்கள் இடம்பெறுகின்றன. பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் பால் ஸ்மித்தின் தனித்துவமான டிசைன் அணுகுமுறை இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சிறப்பு பதிப்புகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் 20-க்கும் மேற்பட்ட பிரத்யேக வடிவமைப்பு அம்சங்கள் உள்ளன. ஸ்டேட்மென்ட் கிரே, இன்ஸ்பயர்டு ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் மெட்டாலிக் என 3 கலர் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் முதல் 2 வண்ணங்களும் பழைய மினி கார்களின் பாரம்பரிய நிறங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பதிப்புகளின் உட்புறத்தில் பிரத்யேக அலங்காரங்கள், ஸ்டீயரிங் வீலில் வண்ணமயமான கோடுகள், இருக்கைகளில் நீல நிறத் தையல் வேலைப்பாடுகள் மற்றும் பால் ஸ்மித் அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. கதவைத் திறக்கும்போது 'ஹலோ' (Hello) என்ற வார்த்தையை ஒளியாக வெளிப்படுத்தும் வசதியும், பிரத்யேக டிசைன் கொண்ட தரை விரிப்புகளும் இந்த கார்களின் தனித்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன.
இந்தியாவில் மினி கூப்பர் எஸ்இ மற்றும் பால் ஸ்மித் எடிஷன் கார்களுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், வேரியண்ட் வாரியான விவரங்கள், முன்பதிவுத் தொகை மற்றும் டெலிவரி கால அட்டவணை ஆகியவை வரும் 27-ம் தேதி நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.