
வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), 2027-ம் ஆண்டிற்குள் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 3 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், இந்தியச் சாலைகள் & வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப இவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ஆரம்ப நிலை மாடலான Evo, குடும்பப் பயன்பாட்டிற்கான Kyo, மற்றும் அதிக செயல்திறன் கொண்ட Kinet ஆகிய 3 மாடல்களும் வெவ்வேறு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு களமிறங்க உள்ளன. இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் டீலர்ஷிப் நெட்வொர்க் மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரமாக உருவாக்கி வருகிறது.
இந்தியச் சந்தைக்கென உருவாக்கப்படும் இந்த 3 ஸ்கூட்டர்களும் வெறுமனே பெயர் மாற்றப்பட்டு விற்பனைக்கு வரப்போவதில்லை. இவற்றின் சேஸிஸ் (Chassis), வெளிப்புற வடிவமைப்பு, கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground clearance) மற்றும் இருக்கைக்கு அடியில் உள்ள பொருட்கள் வைக்கும் இடவசதி (Underseat storage) ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலும், இந்திய மாடல்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டவும் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இறுதி விவரக்குறிப்புகள் மற்றும் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வியட்நாமில் உள்ள இவற்றின் தற்போதைய மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
வின்ஃபாஸ்ட்டின் இந்திய வரிசையில் மிகவும் விலை குறைந்த, ஆரம்ப நிலை மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வியட்நாம் மாடலில் 3 bhp பவரை வெளிப்படுத்தும் ஹப்-மவுண்டட் (Hub-mounted) எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ ஆகும். இதில் 1.5 kWh LFP பேட்டரி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் கூடுதலாக மற்றொரு 1.5 kWh பேட்டரியையும் இணைத்துக் கொள்ளலாம். இரண்டு பேட்டரிகளையும் பயன்படுத்தும் பட்சத்தில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கி.மீ வரை மைலேஜ் (Range) தரும். முன்புற டிஸ்க் பிரேக், 12-இன்ச் சக்கரங்கள், LCD இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, வாகனத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகியவை இதில் உள்ளன. 2 பேட்டரிகள் பொருத்தப்பட்ட நிலையில், இருக்கைக்கு அடியில் 12 லிட்டர் சேமிப்பு இடவசதி கிடைக்கும்.
அன்றாடக் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற நடுத்தர (Mid-range) மாடலாக இது நிலைநிறுத்தப்படும். இதன் வியட்நாம் மாடலில் 3 kW (சுமார் 4 bhp) திறன் கொண்ட ஹப்-மவுண்டட் மோட்டார் உள்ளது. இதன் அதிகபட்ச வேகமும் மணிக்கு 70 கி.மீ ஆகும். ஈவோ மாடலைப் போலவே இதிலும் 1.5 kWh LFP பேட்டரியுடன், கூடுதலாக ஒரு 1.5 kWh பேட்டரியை இணைக்கும் வசதி உள்ளது. 2 பேட்டரிகளுடன் சேர்த்து இது 160 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும். 14-இன்ச் சக்கரங்கள், புளூடூத் வசதியுடன் கூடிய TFT டிஸ்ப்ளே, ஸ்மார்ட் கீ (Smart key) & மலைப்பாதைகளில் வாகனம் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் ஹில்-ஹோல்ட் (Hill-hold) வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏதுவாக 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் (Underseat storage) இதில் உள்ளது.
அதிக வேகம் & செயல்திறனை (Performance) விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான பிரீமியம் மாடலாக இது இருக்கும். இதன் வியட்நாம் மாடலில் சக்திவாய்ந்த 5.2 kW (சுமார் 7 bhp) ஹப்-மவுண்டட் மோட்டார் மற்றும் இரண்டு 1.5 kWh LFP பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இது மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும், 0 முதல் 50 கி.மீ வேகத்தை 6 வினாடிகளுக்குள் எட்டிவிடும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கி.மீ வரை பயணிக்கும். 14-இன்ச் சக்கரங்கள், TFT டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் 22 லிட்டர் சேமிப்பு இடவசதி ஆகியவை இதில் உள்ளன. சாதாரண சார்ஜர் மூலம் இதனை 0 முதல் 100% வரை சார்ஜ் செய்ய சுமார் 9 மணி நேரம் ஆகும்.
இந்தியச் சாலைகளின் தன்மைக்கு ஏற்ப இந்த 3 ஸ்கூட்டர்களிலும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் வழங்கப்பட உள்ளன. மோட்டார் திறன் மற்றும் பேட்டரி கட்டமைப்புகளிலும் இந்தியாவிற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படலாம். முக்கியமாக, இந்த மூன்று ஸ்கூட்டர்களையும் இந்தியாவிலேயே (உள்ளூர் உற்பத்தி) தயாரிக்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. எனினும், உள்நாட்டு உதிரிபாகங்கள் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
அறிமுகக் காலம் மற்றும் போட்டியாளர்கள்
2027-ம் ஆண்டில் இந்த 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த வின்ஃபாஸ்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 34 நகரங்களில், 50-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தம் (Letters of Intent) செய்துள்ளது. சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் அறிமுகமானதும், இந்த ஸ்கூட்டர்கள் டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) உள்ளிட்ட முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.