
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுமீத் நாரங் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தபடி, தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள புதிய '2026 பஜாஜ் பல்சர் NS200' மற்றும் 'பல்சர் N250' பைக்குகளின் முழுமையான சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் பல்சர் N160 S, N160 SS மற்றும் அடுத்த தலைமுறை பல்சர் 125, 150 பைக்குகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த 2 பவர்ஃபுல் பைக்குகளையும் புதிய ரேசிங் பாகங்களுடன் பஜாஜ் களமிறக்கவுள்ளது. பழைய மாடல்களின் அதே கம்பீரமான தோற்றம் மற்றும் பெட்ரோல் டேங்க் டிசைனைத் தக்கவைத்துக் கொண்டு, கார் மற்றும் கேடிஎம் (KTM) பைக்குகளுக்கு இணையான அட்வான்ஸ்டு வசதிகளுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த 2 மாடல் பைக்குகளிலும் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், புத்தம் புதிய 5-இன்ச் டிஎஃப்டி (TFT) வண்ண டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை ஆகும். ப்ளூடூத் மற்றும் வைஃபை (WiFi) மூலம் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளலாம். பிரீமியம் கார்களில் இருப்பதைப் போன்று கூகுள் மேப்ஸ் மிரரிங் (Google Maps Mirroring) நேவிகேஷன் வசதியை இந்தத் திரை முழுமையாக ஆதரிக்கிறது.
பைக் ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஆர்சி புக் (RC), இன்சூரன்ஸ் பேப்பர் மற்றும் ஓட்டுநர் உரிமம் (DL) போன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும் பிரத்யேக வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களைக் கட்டுப்படுத்தும் மியூசிக் கன்ட்ரோல் வசதி, ஸ்கிரீனை கைகளால் எளிதாகக் கட்டுப்படுத்த ஹேண்டில்பாரில் உயர்தர சுவிட்ச் கியர் பாகங்கள் (Upscale Switchgear) அமைக்கப்பட்டுள்ளன.
புதிய 2026 பல்சர் NS200 பைக்கின் ஓட்டுதல் தரம் மற்றும் கார்னரிங் ஸ்டெபிலிட்டியை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உள்கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது: கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா போன்ற சர்வதேச ரேசிங் பைக்குகளுக்குச் சஸ்பென்ஷன் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற 'டபிள்யூபி பெர்ஃபார்மன்ஸ் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் WP Apex USD சஸ்பென்ஷன் போர்க்குகள் இந்த பைக்கின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
பல்சர் பைக் வரலாற்றிலும், ஒட்டுமொத்த பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளிலும் இந்த பிரீமியம் WP சஸ்பென்ஷனைப் பெறும் முதல் பைக் புதிய பல்சர் NS200 ஆகும். இது இந்திய சாலைகளின் பள்ள மேடு மென்மையாக உள்வாங்கிக்கொள்ளும். மேலும், ரைடரின் கை விரல்களின் நீளத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் 'அட்ஜஸ்டபிள் லிவர்கள்' (Adjustable Levers) வசதியும் NS200 மாடலில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.
சந்தையில் உள்ள பிற பிரீமியம் பைக்குகளுக்குப் போட்டியாக, இரண்டு பைக்குகளிலுமே வெவ்வேறு சாலைகளுக்கு ஏற்ப வண்டியின் செயல்திறனை மாற்றியமைக்க 4 புதிய ரைடிங் மோடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ரெயின் (Rain)
ஸ்போர்ட் (Sport)
ரோடு (Road)
ஆஃப்-ரோடு (Off-road)
பந்தய களங்களில் வேகத்தைக் கணக்கிட விரும்பும் இளைஞர்களுக்காக பிரத்யேகமாக 'லேப் டைமர்' (Lap Timer) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கான 'ஹஸார்ட் விளக்கு சுவிட்ச்' மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சுவிட்சுகள் ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய நம்பகமான இன்ஜின்களே தொடர்கின்றன.
பல்சர் NS200: 199.5cc சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின்.
பல்சர் N250: 249cc சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு இன்ஜின் (24.2 bhp பவர், 21.5 Nm டார்க் திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்).
மைலேஜ் திறன்:பல்சர் NS200: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 35 முதல் 40 கி.மீ.
பல்சர் N250: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 32 முதல் 36 கி.மீ.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இன்னும் சில நாட்களில் ஷோரூம்களுக்கு வரவிருக்கும் இந்த பைக்குகளின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் லான்ச்சின் போது வெளியிடப்படும். தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஷோரூம்களில் இந்த புதிய பைக்குகளுக்கான முன்பதிவுகள் மிக விரைவில் தொடங்கவுள்ளன.