
ஆஞ்சநேயர் ராமரின் தீவிர பக்தர் ஆவார். பகவான் ஸ்ரீராமருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாக உணர்வு கொண்டவர். அவர் வீரம், பக்தி, புத்திசாலித்தனம் மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக விளங்குகிறார். ஒரு தெய்வமாக அவர் அனைத்து மனிதர்களையும், அனைத்து ராசிக்காரர்களையும் சமமாக பார்க்கிறார். இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் படி அவருக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. அவருடைய குணாதிசயங்கள் சில ராசிகளுடன் ஒத்து போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அவர் தைரியத்தையும், ஆற்றலையும், உறுதியையும் வாரி வழங்குகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் தைரியசாலிகள், முன்னோடி மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். இவர்கள் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்கள். ஆஞ்சநேயரின் வீரமும், தைரியமும் மேஷ ராசியின் இயல்புடன் ஒத்துப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் மன உறுதியையும் தடைகளையும் கடப்பதற்கான ஆற்றலையும் பெறலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் தங்கள் இயற்கையான தைரியத்தை மேலும் வலுப்படுத்தி, உறுதியுடன் முன்னேற முடியும்.
சிம்ம ராசிக்காரர்கள் தலைமை மற்றும் ஆதிக்க குணம் நிறைந்தவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதிலும், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உறுதியாக இருப்பார்கள். ஆஞ்சநேயரின் தன்னலமற்ற சேவை மற்றும் விசுவாசம் சிம்ம ராசியின் இத்தகைய உயர்ந்த குணங்களுடன் ஒத்துப்போகிறது. சிம்ம ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரின் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலமும், ஆஞ்சநேயருக்கு உகந்த நாட்களில் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வெண்ணைய் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும் ஆஞ்சநேயரின் பரிபூரண அருளைப் பெற முடியும்.
தனுசு ராசிக்காரர்கள் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒருவராக இருக்கின்றனர். ஏனெனில் அனுமான் மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனுசு ராசிக்காரர்கள் ஆன்மீகத் தேடல் உயர்ந்த இலட்சியங்களால் அறியப்படுபவர்கள். இது ஆஞ்சநேயரின் பக்தி மற்றும் அறிவு தேடலுடன் இயல்பாக ஒத்துப் போகிறது. புராணங்களின்படி ஆஞ்சநேயர் புத்திசாலித்தனத்துடனும், ஆன்மீக உறுதியுடனும் செயல்படுவது தனுசு ராசிக்காரர்களின் குணங்களுடன் ஒத்துப்போகிறது. தனுசு ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, ஹனுமன் சாலிசா பாராயணம் செய்வது ஆகியவற்றின் மூலம் ஆஞ்சநேயரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.
விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். ஆஞ்சநேயர் எப்படி ராமனின் படையில் தளபதியாக இருந்து செயல்பட்டாரோ, அது போல நவகிரகங்களில் படைத்தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். எனவே விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அனுமனின் அருள் எப்போதும் இருக்கும். அனுமனின் அருளால் விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் எந்த வேலைகளை செய்தாலும் தடைகள் ஏற்படாது. அனுமன் இவர்களுக்கு பரிபூரண ஆற்றலை அளிக்கறார். அனுமனை வழிபடுவதால் இவர்கள் நிதி ரீதியாகவும் நல்ல பலன்களை அனுபவிக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் அனுமனுக்கு உகந்த செந்தூரம் வாங்கி தானம் அளிப்பது நன்மைகளை தரும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அதிபதியாக விளங்குகிறார். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் நம்மால் தீர்வு காண முடியும். ஆஞ்சநேயர் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அள்ளி வழங்குகிறார். இவர்களின் நிதிநிலை எப்போதும் சீராகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் உண்மையான பக்தி மற்றும் கடமை உணர்வு ஆஞ்சநேயர் உடன் இயல்புடன் ஒத்துப் போகிறது. கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையில் ஆஞ்சநேயரை நினைத்து விரதம் இருப்பதன் மூலம் தங்கள் உறுதியை மேலும் வளப்படுத்திக் கொள்ள முடியும்.
ஆஞ்சநேயரை வணங்குவதற்கு அனுமான் சாலிசா பாராயணம் செய்வது மிகச்சிறந்த வழியாகும். இது மன உறுதி, தைரியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அதிகரிக்கும். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருப்பது அவருடைய அருளை பெற உதவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடலாம். வெண்ணெய் சாற்றுவது, செந்தூரம் சாற்றுவது, செந்தூரம் தானம் அளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடலாம். அவர் ஸ்ரீ ராமரின் பக்தர் என்பதால் ஸ்ரீ ராமரை வணங்குவதும் ஆஞ்சநேயருக்கு மிகப் பிடித்தமான செயலாகும். “ஓம் ஹனுமதே நமஹ” என்கிற மந்திரத்தை ஜெபிப்பது எதிர்மறை ஆற்றல்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கும்.
ஆஞ்சநேயர் தெய்வமாக இருப்பதால் அவருக்கு குறிப்பிட்ட ராசிகளை மட்டும் பிடிக்கும் என்று கூறுவது அவருடைய பரந்த அருளை குறுக்குவதற்கு சமமாகும். அவர் ஒரு தெய்வமாக எந்த ராசியையும் பாகுபாடு செய்யாமல் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். எந்த ராசியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையான பக்தியுடனும், நேர்மையுடனும் அவரை வணங்கினால் அவருடைய அருளை பரிபூரணமாக பெற முடியும். மேற்குறிப்பிடப்பட்ட ராசிகள் ஆஞ்சநேயர் குணங்களுடன் இயல்பில் ஒத்துப் போகின்றன என்றாலும், எந்த ராசிக்காரராக இருந்தாலும் உண்மையான பக்தி மற்றும் மனத்தூய்மையுடன் அவரை வணங்கினால் அவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள், பொதுவான ஜோதிட கருத்துக்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)