
ஜோதிடத்தில் சுக்கிரன் அன்பு, செல்வம், ஆடம்பரம் மற்றும் உறவுகளின் காரகராக விளக்குகிறார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும், ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறார். வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலன்களை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சுக்கிரன் கடக ராசியில் நுழையும் பொழுது உணர்ச்சி மற்றும் உறவுகளை மையப்படுத்திய ஒரு காலகட்டம் தொடங்கும். கடகம் குடும்பத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சி மிக்க ராசியாக இருப்பதால் சுக்கிரனின் இந்த பயணம் அன்பு, காதல் மற்றும் குடும்ப உறவுகளில் ஆழமான பிணைப்புகளை ஏற்படுத்தலாம். இந்த பெயர்ச்சி செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்க உள்ளது. அதன் பின்னர் சுக்கிரன் சிம்ம ராசிக்கு நகர இருக்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தை அடையப்போகும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியின் நான்காவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளது. நான்காம் வீடானது குடும்பம், வீடு, உறவுகளை குறிக்கும் வீடாகும். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டில் அமைதியும், குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமும் அதிகரிக்கும். பழைய வீட்டை மராமத்து செய்யாமல் வைத்திருப்பவர்களுக்கு அந்த பணிகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகும். நீண்ட கால ஆசைகள் தற்போது நிறைவேற இருக்கிறது. வெளிநாடுகளில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஆசைகள் கைகூடும் நேரம் நெருங்கியுள்ளது.
ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் எதிரொலிக்க இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நிதி ரீதியாக நல்ல நிலையை அடையப் போகிறார்கள். சுக்கிரனின் பெயர்ச்சியால் வேலையிலும் வியாபாரத்திலும் பன்மடங்கு லாபம் பெருக உள்ளது. அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்க உள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான பலன்களை தரவுள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். மூதாதையர்கள் சொத்தில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி அனைத்தும் சுமூகமாக முடியும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்திருக்கும். உடல் நல ஆரோக்கியம் மேம்படும்.
கடக ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். இந்த பெயர்ச்சி காரணமாக கடக ராசியின் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்கும் யோகம் கைகூடும். காதல் உறவுகளில் இருப்பவர்களுக்கு நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். உங்களுடைய ஆளுமை மற்றும் தோற்றத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். இந்த சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நிலையான வெற்றி நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியை கொண்டு வரவுள்ளது.
சுக்கிரன் விருச்சிக ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக அவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுவார்கள். சட்டப் போராட்டங்கள் நடத்தி வருபவர்களுக்கு இந்த காலம் வெற்றிகரமாக அமையும். சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்து, நிலம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட காலமாக நோயால் போராடி வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வரும் காலம் நெருங்கியுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் நல்ல பலன்கள் ஏற்படும் என்றாலும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ராசிகளுக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். சுக்கிரனின் கடக ராசி பெயர்ச்சி ஆகஸ்ட் 21 முதல் ஒரு சிறப்பான காலகட்டத்தை உருவாக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் பொதுவானவேயே. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து இந்த பலன்களில் மாற்றம் ஏற்படலாம். எனவே அனுபவமிக்க ஜோதிடரை அணுகி கலந்து ஆலோசிப்பது நல்லது)