
ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசிகளை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை ஏற்படுத்துகின்றன. இந்த யோகங்கள் மனிதர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குகின்றன. சில சமயங்களில் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்கள் உருவாகின்றன. சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் நவம்பர் மாதத்தில் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜயோகங்களை உருவாக்குகின்றன. 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த அரிதான மற்றும் சக்தி வாய்ந்த சேர்க்கை பலருக்கு நன்மைகளையும், வெற்றிகளையும், செல்வத்தையும் தரக்கூடியவை. இந்த மூன்று ராஜயோகங்களும் தனித்தனியே சிறப்பான பலன்களை கொடுக்கக்கூடியவை. அவை ஒரே நேரத்தில் உருவாவது பன்மடங்கு நன்மைகளைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குருபகவான் தனது சொந்த ராசியான தனுசு அல்லது மீனத்தில் அல்லது உச்ச ராசியான கடகத்தில் கேந்திர ஸ்தானங்களில் (1, 4, 7, 10) வீடுகளில் இருக்கும் பொழுது ஹன்ஸ் ராஜ யோகம் உருவாகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் மிகுந்த ஞானம், ஆன்மீக அறிவு மற்றும் நீதி உணர்வுடன் இருப்பார்கள். சமூகத்தில் மதிப்பும் புகழும் பெறுவார்கள். செல்வம் பெருகும். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெறுவார்கள். தலைமைத்துவ பண்புகள் மேம்பட்டு நல்ல வழிகாட்டிகளாகவும், ஆலோசகர்களாகவும் திகழ்வார்கள். சுக்கிரன் தனது சொந்த ராசிகளான ரிஷபம் அல்லது துலாம் அல்லது உச்ச ராசியான மீனத்தில் கேந்திர ஸ்தானங்களில் இருக்கும் பொழுது உருவாகும் யோகம் தான் மாளவ்ய யோகம். இந்த யோகம் கிடைப்பவர்கள் ஆடம்பரமான, வசதியான வாழ்க்கையைப் பெறுவார்கள். கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். நல்ல வாழ்க்கை துணை அமையும். நிதிநிலை மேம்பட்டு சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.
புதன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்கள் இணைந்து உருவாக்கும் யோகம் தான் புதாத்திய ராஜயோகம். புதன் மற்றும் சூரியன் ஒரே ராசியில் இணைந்திருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகம் உள்ளவர்கள் கூர்மையான புத்திசாலிகளாகவும், சிறந்த பகுப்பாய்வு திறன் மற்றும் தகவல் தொடர்பு திறனை கொண்டிருப்பார்கள். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல அறிவைப் பெறுவார்கள். அரசுத்துறை, நிர்வாக பதவிகள் அல்லது தகவல் தொடர்பு தொடர்பான துறைகளில் வெற்றி பெறுவார்கள். இந்த யோகத்தால் புகழ் மற்றும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். இந்த மூன்று ராஜ யோகங்களும் ஒரே நேரத்தில் உருவாகுவது சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கவுள்ளது. தனிப்பட்ட ஜாதக அமைப்பை பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம். பொதுவாக இந்த ராஜயோகங்கள் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகளை கொடுக்கும் என்று ஜோதிட ரீதியாக கணிக்கப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜ யோகங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. முக்கியமாக மாளவ்ய ராஜயோகம் தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது உயர் பதவிகள் தேடி வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த யோகத்தின் மூலம் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாக உள்ளது. இத்தனை நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் தீரும் காலம் நெருங்கி உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ஹன்ஸ் மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜ யோகங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் விடுதலையை கொடுக்க உள்ளது. இதுவரை வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு விமோசனம் கிடைக்க உள்ளது. இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து வாழ்க்கை செழிக்கும். மாளவ்ய ராஜயோகம் ஒன்பதாவது வீட்டிலும் ஹன்ஸ் ராஜயோகம் ஆறாவது வீட்டிலும் உருவாவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு மிக சாதகமான சூழல் ஏற்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இத்தனை நாட்களாக எதிரிகளிடம் தோற்றுக் கொண்டிருந்த நீங்கள், இனி எதிரிகளை தோற்கடிப்பீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் கைக்கு வந்து சேர வேண்டிய பணங்கள் எங்காவது முடங்கி இருந்தால் அது உங்களிடம் வந்து சேரும். சுப காரியங்கள் கைகூடும்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களும் நல்ல மாற்றத்தை தரவுள்ளது. இவர்களுக்கு தன்னம்பிக்கை இரு மடங்கு அதிகரித்து ஆளுமை திறன் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு சாதகமான காலம் ஏற்பட்டுள்ளது. புதிய வீடு, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள், டெண்டர்கள் எடுப்பவர்களுக்கு எளிதில் ஒப்பந்தங்கள் கைகூடும். கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணம் எங்காவது முடங்கி இருந்தால் அந்த பணம் வந்து சேரலாம். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சுமூக உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாமல் இருந்து வருபவர்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடும்.
2025 இல் இந்த யோகங்கள் உருவாகும் பொழுது பலன் அடையும் பிற ராசிகளாக சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிகள் குறிப்பிடப்படுகிறது. சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து அவர்களின் தலைமை பண்புகள் மேம்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவர். துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம், எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல பண வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, மகிழ்ச்சியான சூழல் நிலவும். மீன ராசிக்காரர்களுக்கு ஞானம், ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும், தலைமை பண்பு அதிகரிக்கும்.
(குறிப்பு: இந்த ராஜயோகங்கள் ஒவ்வொரு முறையும் உருவாகும் ராசி மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள், கிரகங்களின் நிலை, அவற்றின் உச்சம், ஆட்சி, நீச்ச நிலை ஆகியவற்றுடன் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளை பொருத்து மாறுபடலாம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு என்பது அதன் அரிதான தன்மையை குறைக்கிறது. இருப்பினும் இத்தகைய சேர்க்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உருவாகலாம். இந்த அரிய ராஜயோகங்களின் சேர்க்கை குறிப்பிட்ட ராசிகளுக்கு மட்டும் அல்லாமல் பொதுவான மனித குலத்திற்கும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராஜயோகங்களின் பலன்கள் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)