Tirumala Tirupati: தலைமுடியை காணிக்கையாக கொடுப்பதை ஒரு புனிதமான நேர்த்திக்கடனாகக் கருதுகிறார்கள். இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள புராணக்கதை, ஆன்மீக அர்த்தம் முழுமையாக இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நினைத்து காரியம் நிறைவேறிவிட்டால் உண்டியல் காணிக்கை மற்றும் தலைமுடியை காணிக்கையாக கொடுப்பதை ஒரு புனிதமான நேர்த்திக்கடனாகக் கருதுகிறார்கள். இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள புராணக்கதை, ஆன்மீக அர்த்தம் மற்றும் பக்தர்கள் கொடுக்கும் முடியை என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
26
நீலா தேவியின் தியாகம்
புராணங்களின்படி, வெங்கடாசலபதி சுவாமியின் தலையில் காயம் ஏற்பட்டபோது, நீலா தேவி என்ற கந்தர்வ கன்னி தன் கூந்தலை வெட்டி சுவாமிக்கு அர்ப்பணித்தார். அவரின் பக்தியைக் கண்ட சுவாமி, பக்தர்கள் அளிக்கும் தலைமுடியின் புண்ணியம் நீலா தேவியைச் சேரும் என வரம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தான், திருமலையில் முடி காணிக்கை ஒரு புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
இந்து மரபில், தலைமுடி ஒருவரின் அழகு மற்றும் அகங்காரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதை இறைவனுக்கு அர்ப்பணிப்பது, 'நான்' என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு முழுமையாகச் சரணடைவதைக் குறிக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பிறகோ அல்லது குடும்ப நேர்த்திக்கடனை நிறைவேற்றவோ பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
திருமலையில் உள்ள கல்யாணக்கட்டாக்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில், ஒரு நாளைக்கு 50,000 முதல் 57,000 பேர் வரை முடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் சிறப்பு ஊழியர்களையும், சுகாதாரமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
56
தலை முடி ஆறு வகைகளாக பிரிக்கின்றனர்
பக்தர்கள் கொடுக்கும் தலைமுடியை முதலில் திருமலையில் சேகரித்து, பின்னர் திருப்பதில் உள்ள பிரத்யேக மையத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு, முடியை சுத்தம் செய்து, அதன் நீளம் மற்றும் தரத்தின் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கின்றனர். 31 அங்குலத்திற்கு மேல், 16-30, 10-15, 5-9, 5 அங்குலத்திற்கும் குறைவு, மற்றும் நரை முடி என பிரிக்கப்படுகிறது. நீளமான, தரமான முடிக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. லண்டன், அமெரிக்கா, ஆசிய நாடுகளில் 'திருப்பதி முடி' (Tirupati Hair) ஒரு பிராண்டாகவே பார்க்கப்படுகிறது.
66
லட்ச ரூபாய்க்கு விலை போகும் முடி
1985-ஆம் ஆண்டு முதல், திருமலை திருப்பதி தேவஸ்தானமே (TTD) நேரடியாக முடி விற்பனையை நிர்வகித்து வருகிறது. 2011-ல் இ-ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வருமானம் பல மடங்கு அதிகரித்தது. தரமான, நீளமான முடி ஒரு கிலோவுக்கு லட்ச ரூபாய் வரை விலை போகும். இந்த வருமானத்தை கோயில் நிர்வாகம், அன்னதானம், கல்வி, மருத்துவ சேவைகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த பயன்படுத்துகிறது. இது வெறும் நேர்த்திக்கடன் மட்டுமல்ல, பக்தி, ஆன்மீகம், மற்றும் நவீன நிர்வாகம் ஆகியவற்றின் கலவையாகும்.