
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இரண்டு சுப கிரகங்களுக்கிடையே நவம்பர் 25 ஆம் தேதி கிரகப் போர் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலை 3:51 மணிக்கு தொடங்கி காலை 8:13 மணி வரை இந்த போர் புதன் மற்றும் சுக்கிரன் இடையே நடைபெற இருக்கிறது. புதன் பகவான் அறிவு, பேச்சு, வணிகம், ஞானம், தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும், சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும் இருக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையேயான போர் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எதிர்மறை விளைவுகளை தரக்கூடும்.
ஜோதிடத்தின்படி கிரகப் போர் என்பது முக்கியமான மற்றும் சுவாரசியமான நிகழ்வாகும். 2 கிரகங்கள் வானில் ஒன்றுக்கொன்று அருகாமையில் நகரும் பொழுது இது நிகழ்கிறது. ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து ஒன்றுக்கொன்று ஒன்று முதல் ஐந்து டிகிரிக்குள் வரும்பொழுது அவற்றின் ஆற்றல்கள் நேரடியாக மோதுகின்றன. இது கிரகப் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போர் முதன்மையாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நடக்கிறது. மேலும் ராகு கேது தவிர ஐந்து கிரகங்களுக்கு இடையே மட்டுமே கிரகப் போர் நிகழ்கிறது. அதாவது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி இடையே மட்டுமே இந்த போர் சாத்தியமாகும்.
கிரகங்களுக்கு இடையிலான இந்த நெருக்கம் என்பது மிகவும் தீவிரமானது. அவை ஒன்றுக்கொன்று செல்வாக்கு மிகுந்த மண்டலங்களுக்குள் நுழைகின்றன. இது கிரகங்களுக்கு இடையே ஆதிக்கத்திற்கான போட்டியை தூண்டுகிறது. புதன்-சுக்கிரன் இடையிலான கிரகப் போரானது இந்த ஆண்டின் இரண்டாவது போராகும். இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரனும் குருவும் போர் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கிரகப் போர் காரணமாக 5 ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமானதாக இல்லை. தொழில் மற்றும் புதிய கூட்டாண்மைகளை தவிர்த்து விடுங்கள். பெரிய முதலீடுகள் செய்தல் கூடாது. பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். இந்த காலகட்டத்தில் மனச்சோர்வுகள் அதிகரிக்கும். ஓய்வு மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் அமைதியின்மை நிலவலாம். சிறு தவறான புரிதல் கூட பெரிய பிரச்சனைகளாக வெடிக்கலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் கூட பிடிக்காமல் போகலாம். மனம் நிலையற்றதாக இருக்கலாம். ஆடம்பரம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமானதாக இல்லை. வேலையில் தடைகள் ஏற்படலாம். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு அதிகரிக்கலாம். ஆற்றல் குறைவு காரணமாக சோம்பல் அதிகரிக்கும். வாழ்க்கை நிலையற்றதாக மாறக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவது கூட திருப்தியை தராது. திட்டமிட்டு இருந்த காரியங்கள் தள்ளிப் போக வாய்ப்புகள் உண்டு.
மிதுன ராசிக்காரர்கள் பேசும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். தவறான புரிதல்கள் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். வருமானம் மற்றும் செலவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பற்றி பேசும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பின்னடைவை சந்திக்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படலாம். பொழுதுபோக்கு கூட அமைதியை தராது. இந்த காலத்தில் அமைதியற்றவராக உணர்வீர்கள். வாழ்க்கை மீதான ஆர்வம் இந்த காலகட்டத்தில் குறையக்கூடும்.
கன்னி ராசிக்காரர்கள் சில நிதி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள கூடும். எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும். திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டியது அவசியம். உடலுக்கு ஓய்வு கொடுக்கும் போதிலும் மன அமைதி இல்லாமல் இருக்கலாம். ஆடம்பர பொருட்கள் நிதி இழப்பை ஏற்படுத்தலாம். பொன், பொருள், வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் திருப்தி இல்லாத நிலை ஏற்படக்கூடும்.
தனுசு ராசி காரர்களுக்கு வேலையில் பதற்றம் ஏற்படலாம். உரையாடலில் நிதானம் தேவை. நிதி வரவு குறித்த விஷயங்களில் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம். மன அழுத்தம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் குறையக்கூடும். மனம் உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக இருக்கும். மன அமைதிக்காக என்ன செய்தாலும் திருப்தி அடைய மாட்டீர்கள். சமூக வாழ்க்கை சற்று மந்தமாக தோன்றலாம். எனவே இந்த காலகட்டத்தில் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)