Sani Peyarchi Parihara Rasigal 2026 : மார்ச் 6 வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இந்தப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள், யார் பரிகாரம் செய்ய வேண்டும்? பற்றி விரிவாகக் காணலாம்.
சனி பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனியும், மீன ராசிக்கு இரண்டாம் கட்டமான ஜென்ம சனியும், மேஷ ராசிக்கு முதல் கட்டமான விரய சனியும் தொடங்குகிறது. சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் நடக்க இருக்கிறது.
25
கர்ம காரகன் சனி பகவான்
சனி பகவான் கர்ம காரகன் மற்றும் நீதி தேவன் ஆவார். அவர் நாம் செய்யும் செயல்களைப் பொறுத்து அவர் நமக்கு பலன்களை வழங்குவார். நாம் செய்யும் நற்செயல்களையே அவரை மகிழ்விக்கும். முறையான வழிபாடும், தானமும் அவரால் ஏற்படும் கஷ்டங்களை குறைக்க உதவும். சனி பகவானின் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
35
வழிபாட்டு முறைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ராசிகள் புதுச்சேரிக்கு அருகே உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபடலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சனி பகவான் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் அல்லது எள் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட அனுமன் வழிபாடு மிகச் சிறந்தது. சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவது விசேஷம். தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவரை வழிபடுவது விபத்து மற்றும் மரண பயத்தை போக்கும்.
சனிபகவானுக்கு மிகவும் பிடித்த விஷயம் ஏழைகளுக்கு உதவுவது. சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம் வழங்குவது நல்லது. ஏழைகளுக்கு ஆடைகள், போர்வைகள் அல்லது குடை தானமாக வழங்கலாம். இரும்பிலான பொருட்கள் அல்லது இரும்பு சட்டி போன்றவற்றை தானமாக வழங்குவது சனியின் வீரியத்தை குறைக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் அல்லது எழுதுப் பொருட்கள் வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது.
55
சொல்ல வேண்டிய மந்திரம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் தினமும் குளித்து முடித்து கீழ்கண்ட ஸ்லோகத்தை ஒன்பது முறை சொல்ல வேண்டும்.
நீலாஞ்சன சமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
இந்த காலகட்டத்தில் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக இருக்க வேண்டும். மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. பெரியவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மதித்து நடக்க வேண்டும். சனி பகவானின் கோபத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுக்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். போதைப்பழக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு மனத்தூய்மையுடன் இறைவனை வணங்கினால் இந்த கடுமையான காலகட்டத்தையும் எளிதாக கடந்து விட முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)