
ஜோதிடத்தின் படி ராகு ஒரு பாவ கிரகமாக கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை தங்கியிருக்கிறார். ராகு தனது நட்பு ராசியான கும்ப ராசியில் மே 18 2025 நுழைந்து அங்கு பயணித்து வருகிறார். இதன் மூலமாக பல ராசிக்காரர்கள் நன்மை அடைந்து இருப்பார்கள். ஆனால் பல ராசிக்காரர்களுக்கு இது தீமைகளை தந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ராகுவால் சிறந்த பலன்களை தர முடியவில்லை. ஏனெனில் அவரது அம்ச பலம் 24 டிகிரிக்கு கீழே இருக்கிறது. அதாவது அவர் இறந்த நிலையில் இருந்து முதுமைக்கு நகர்ந்து கொண்டிருந்தார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி அவரது அம்ச பலம் 23 டிகிரியாக இருக்கும். இதன் காரணமாக அவர் முதுமையிலிருந்து இளமைப் பருவத்திற்குள் நுழைகிறார். செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ராகு 30 டிகிரி முதல் 24 டிகிரி வரையிலான வரம்பை கடப்பார். அப்போது அதன் டிகிரி வலிமை 23 டிகிரியாக இருக்கும். மேலும் இது 22°, 21, 20°, 19° என குறைந்து 18 டிகிரியை எட்டும். 18° அடைந்தவுடன் ராகு இளமைப் பருவத்தில் நுழைவார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறந்த பலன்களை பெறப் போகிறார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகர ராசியின் செல்வ ஸ்தானத்தில் ராகு இருக்கிறார். 6, 8, 10 ஆகிய வீடுகளை அவர் பார்வையிடுகிறார். இந்த சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ராகுவின் பார்வையால் செல்வம் ஈட்டும் ஆசை அதிகரிக்கும். ஆனால் எட்டாவது வீட்டின் தொடர்பு காரணமாக நீங்கள் தவறான சகவாசத்தில் சிக்க நேரிடலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் பார்வையால் அதிக தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் தந்திரம் அதிகரிக்கும். ஆனால் குறுக்கு வழியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் எதிரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிரிகளை தோற்கடித்து நீங்கள் வெற்றியாளராக மாறுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராகு மூன்றாவது வீட்டில் அமர்ந்துள்ளார். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய வீடுகளில் விழுகிறது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் பல துறைகளில் வெற்றிகளைப் பெற உள்ளீர்கள். ராகுவின் விருப்பமான இடமாக மூன்றாவது இடம் கருதப்படுகிறது. இந்த வீடு, வீரம், முயற்சி, ஊடகம், கலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ராகுவின் பார்வை 11 ஆம் வீட்டில் விழுவதன் காரணமாக உங்களின் தொழில் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் ஏற்படும். ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் பார்வை ஏழாம் வீட்டில் விழுவதால் நீதிமன்ற வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு சாதகமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்து நடந்தால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கும்ப ராசியின் லக்னத்தில் ராகு இருக்கிறார். மேலும் ராகு இளமைப்பருவத்தில் நுழைவதன் மூலமாக கும்பராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொட இருக்கின்றனர். இவர் உங்கள் மனம், மூளை மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிக்கலாம். இருப்பினும் நீங்கள் லட்சியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்தால் பெரிய இலக்குகளை அடையலாம். பல துறைகளிலும் நீங்கள் மகத்தான வெற்றியை அடைய முடியும். ராகு லக்னத்தில் இருக்கும் பொழுது 5, 7, 9 ஆவது வீடுகளைப் பார்வையிடுகிறார். ஐந்தாவது வீடு கல்வி மற்றும் முதலீட்டின் காரணியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பு, உயர்கல்வி படிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஏழாவது வீடு வணிகம், திருமணம், தொழில் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே இந்த சமயத்தில் திருமணம் மற்றும் தொழிலில் வெற்றி ஆகியவற்றை பெற முடியும்.
ராகுவின் எதிர்மறை தாக்கத்தை தவிர்ப்பதற்கு வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு நன்மை தரும். திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் ராகுவுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது ராகுவை அமைதிப்படுத்த உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)