
இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த கிரகணம் அமாவாசை நாளில் நடக்க இருப்பதால் இது மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. செப்டம்பர் 21 இரவு 11:00 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3:24 வரை கிரகணம் நீடிக்க உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே அதன் சூதகக் காலமும் இங்கு பொருந்தாது. இருப்பினும் நியூசிலாந்து, பிஜி தீவுகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் சூரிய கிரகணம் காணப்படும்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி சூரிய கிரகணம் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக பித்ரு பக்ஷத்தில் வரும் இந்த கிரகணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கிரக நேரத்தில் சுப மற்றும் அசுப சக்திகள் இரண்டும் வலுவாக இருக்கும். இந்த சமயத்தில் பரிகாரங்கள் மற்றும் சடங்குகள் சரியாக செய்யப்பட்டால் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். கிரகணத்தின் விளைவுகளை புரிந்து கொண்டு சரியான முறையில் பரிகாரங்களை செய்ய வேண்டும். இந்த கிரகணம் கன்னி ராசியில் நடக்க இருக்கிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி இந்த கிரகணம் சிலருக்கு நன்மைகளை தரும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரிய கிரகணம் ரிஷப ராசியின் 11-வது வீட்டில் நடக்கிறது. இது வருமானம், லாபம் மற்றும் சமூக உறவுகளை குறிக்கிறது. மீன ராசியின் அதிபதியான குருவும் ரிஷப ராசியில் இருக்கிறார். இதன் காரணமாக நிதி ரீதியான நன்மைகள் ஏற்படும். பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சில் நிதானமும், நடத்தையில் பணிவும் இருந்தால் வெற்றிகளை ஈட்ட முடியும் சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோதுமையை தானம் செய்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும். தடைகளை நீக்கும்.
மிதுன ராசியின் பத்தாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இது வேலை மற்றும் தொழில் வீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சூரிய கிரகணத்திற்குப் பின்னர் உங்கள் தொழில் வாழ்க்கை நல்ல படியாக அமையும். நீங்கள் முன்பு ஒரு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அல்லது எந்த முயற்சியாவது முழுமை அடையாமல் இருந்தால் அதன் பலன்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் பேச்சுத் திறன், தொழில் அறிவு, மேலாண்மைத் திறன் காரணமாக உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். இந்த காலகட்டத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அவை அனைத்தும் பனி போல விலகிவிடும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். சூரிய கிரகணத்திற்குப் பிறகு ஏழைகளுக்கு செம்பு பொருட்களை தானம் செய்யலாம். இது வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும்.
மகர ராசிக்கு சூரிய கிரகணம் மூன்றாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. இது தைரியம், முயற்சி, உடன் பிறப்புகள் மற்றும் குறுகிய பயணங்களுடன் தொடர்புடைய வீடாகும். இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகப்பெரிய மன நிம்மதியை அளிக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய உயரங்களை தொடுவீர்கள். அரசியல் மற்றும் சமூகத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சகோதரர்களுடனான உறவு வலுவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். சூரிய கிரகணத்திற்கு பிறகு கருப்பு எள் அல்லது உளுந்து தானம் செய்வது வெற்றிக்கான பாதையை எளிதாக்கும்.
கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் சூரிய கிரகணம் நடக்க இருக்கிறது. இது பணம், பேச்சு மற்றும் குடும்ப விஷயங்களுடன் தொடர்புடையது. இந்த கிரகணம் எதிர்பாராத பல நன்மைகளை தர இருக்கிறது. நீங்கள் முன்பு ஏதேனும் பணம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து உங்களுக்கு பணவரவு கிடைக்கலாம். மேலும் காப்பீடு, போனஸ், பரம்பரை சொத்து ஆகியவற்றிலிருந்து பணம் கிடைக்கலாம். முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சினைகள் தீர்ந்து அமைதியான சூழல் நிலவும். சூரிய கிரகணத்திற்கு பின்னர் அரிசியை தானம் செய்யலாம். இது மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)