
எண் கணிதம் என்பது எண்களின் அடிப்படையிலான ஜோதிடத்தின் கிளையாகும். எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணும் தனித்துவமான ஆற்றல்கள் மற்றும் பண்புகளுடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் காரணியாகவும் அமைகிறது. எண் கணிதத்தின் முக்கிய பகுதியாக ‘வாழ்க்கைப் பாதை எண்’ விளங்குகிறது. இது ஒருவருடைய பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றைக் கூட்டி ஒரு ஒற்றை இலக்க எண்ணாக குறைப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்த எண்ணானது ஒருவரின் ஆளுமை, திறமைகள், பலம், பலவீனங்கள், எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றிய சில தகவல்களை தரும் என நம்பப்படுகிறது.
1.உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி 3-8-1995 என வைத்துக்கொள்வோம். முதலில் தேதி, மாதம், வருடத்தில் உள்ள அனைத்து எண்களையும் தனித்தனியாக கூட்ட வேண்டும். 3+8+1+9+9+5=35
2.இப்போது கிடைத்த எண் ஒற்றை இலக்க எண்ணாக மாறும் வரை கூட்ட வேண்டும். 3+5=8
இந்த நபரின் வாழ்க்கை பாதை எண் 8 ஆகும்.
சில சமயங்களில் கூட்டும் பொழுது 11, 22 போன்ற எண்கள் வந்தால் அவற்றை அப்படியே வைத்துக் கொள்வார்கள். இந்த எண்கள் ‘மாஸ்டர் எண்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாழக்கைப் பாதை எண்ணுக்கும் தனித்துவமான அர்த்தங்கள் உண்டு. இந்த எண் உங்கள் விதி எண்ணுடன் இணைந்து உங்கள் குணாதிசயங்களின் வெவ்வேறு பக்கங்களை காட்டுகிறது. எண் கணித நிபுணர் ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 முதல் 9 வரையிலான வாழ்க்கைப் பாதை எண்களுக்கான சிறந்த தொழில்கள் என்ன என்பதை விளக்கியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
எண் 1-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் குழுத் தலைவர் (Team Leader), புதிதாக சிந்திப்பவர் (Innovator), ராணுவ அதிகாரி, அரசியல் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி (CEO), கண்டுபிடிப்பாளர், தயாரிப்பாளர், நிறுவனர் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 2-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் மத்தியஸ்தர், ஆலோசகர், ராஜதந்திரி, திருமணப் பொருத்தம் செய்பவர், ஆலோசகர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், கலைஞர், செல்வாக்கு செலுத்துபவர் (Influencer), ஆடை வடிவமைப்பு, ஜோதிடம் ஆகிய துறைகளை தேர்ந்தெடுத்தால் அதில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 3-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் ஆசிரியர், வழக்கறிஞர், பொதுப் பேச்சாளர், மருத்துவத் துறை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், எழுத்தாளர், நிகழ்ச்சி நடத்தும் கலைஞர் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 4-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் ஆசிரியர், பத்திரிகையாளர், பொறியாளர், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில்நுட்பம் தொடர்பான துறைகள் சிறந்த தேர்வாக இருக்கும்.
எண் 5-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் விற்பனை நபர் (Sales Man), எந்த வகையான வணிகம், பயண வலைப்பதிவர், நடிகர், இசைக்கலைஞர் ஆகிய துறைகளை தேர்வு செய்யலாம்.
வாழ்க்கைப் பாதை எண் 6 கொண்டவர்கள் கட்டிடக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், அழகு செல்வாக்கு செலுத்துபவர், ஒப்பனை கலைஞர், நகைகள் அல்லது ஆடம்பர பிராண்ட் கலைஞர் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும்.
எண் 7-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் ஆராய்ச்சியாளர், புதிய கண்டுபிடிப்புகளை செய்பவர், ஆன்மீக ரீதியாக குணப்படுத்துபவர் (Spiritual Healer), மறை அறிவியல், மருத்துவத் துறை, ஆசிரியர் ஆகிய துறைகளை தேர்வு செய்யலாம்.
எண் 8-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் நிதி மேலாளர், முதலீட்டாளர், ரியல் எஸ்டேட், கட்டுமானம், வங்கியாளர், மனிதவளம், நிர்வாகம் ஆகிய துறைகளை தேர்வு செய்யலாம்.
எண் 9-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்கள் விளையாட்டு, இராணுவம் தொடர்பான, சுகாதாரம், தொழில்நுட்பம், உணவு, கட்டுமானம், ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆகிய துறைகளை தேர்வு செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் எண் கணித நிபுணர் ஸ்வேதா சுரேகா வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்)