
வேத ஜோதிடத்தில் செவ்வாய் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இவர் செப்டம்பர் 13 ஆம் தேதி இரவு 9:34 மணிக்கு கன்னி ராசியிலிருந்து வெளியேறி, துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். அக்டோபர் 26 வரை அவர் துலாம் ராசியில் இருப்பார். செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான இவர், “கிரகங்களின் தளபதி” என்றும் அறியப்படுகிறார். இந்த நிலையில் அவர் சுக்கிரனின் ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் ராசி செவ்வாய் கிரகத்திற்கு சாதகமற்றதாக கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் கடுமையான தன்மை மற்றும் துலாம் ராசியின் சமநிலையான ஆற்றல் பெரும்பாலும் மோதலை உருவாக்குகிறது. இந்த நிலையில் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் பகவான் சில ராசிக்காரர்களுக்கு சவாலான காலகட்டத்தை உருவாக்குகிறார். செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அவர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியின் ஏழாவது வீட்டை செவ்வாய் பெயர்ச்சி பாதிக்க இருக்கிறது. இது திருமணம், உறவுகள் மற்றும் கூட்டாண்மை தொடர்பானது. துலாம் ராசி செவ்வாய் கிரகத்தின் எதிரி ராசியாக இருப்பதால், இந்த பெயர்ச்சி வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் மற்றும் பதட்டங்களை அதிகரிக்க கூடும். வணிகக் கூட்டாண்மையிலும் பாதிப்புகள் ஏற்படலாம். உடல் நலனைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் உங்கள் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைத்து விடும்.
பரிகாரம்: அனுமான் சாலிசாவை 11 முறை படிப்பது, சிவப்பு பயிறு தானம் செய்வது இதன் தாக்கத்தை குறைக்க உதவும்.
கடக ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க இருக்கிறார். இது தாய் மற்றும் மன அமைதியுடன் தொடர்புடைய வீடாகும். இதன் காரணமாக குடும்பத்தில் பதட்டம், தயாருடன் கருத்து வேறுபாடுகள், சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். வீடு கட்டி முடித்தவர்கள் புதுமனை புகுவிழா பணிகளில் தாமதம் ஏற்படும். வேலைகளில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலனைப் பொறுத்தவரை இதயம், நுரையீரல் போன்ற பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம். கடகம் செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ராசி என்பதால் இதன் விளைவுகள் சற்று கடினமாகவே இருக்கும்
பரிகாரம்: விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, வெல்லம் மற்றும் கோதுமை தானம் செய்வது விளைவுகளை குறைக்க உதவும்.
துலாம் ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. முதல் வீடு ஆளுமை, ஆரோக்கியம், நம்பிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில் பொறுமையின்மை அதிகரிக்கக்கூடும். தேவையில்லாத கோபம் ஏற்படலாம். தலைவலி, இரத்த அழுத்தம், விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. உறவுகள் மற்றும் கூட்டாண்மையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கை அல்லது வணிகக் கூட்டாண்மையில் பதற்றம் ஏற்படலாம். துலாம் ராசி சுக்கிரனின் ஆளும் ராசியாகும். சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையிலான பகை காரணமாக மனம் மற்றும் உடல் அழுத்தம் அதிகரிக்கக்கூடும்
பரிகாரம்: “ஓம் மங்களாய நமஹ” என்கிற மந்திரத்தை 21 முறை உச்சரிப்பது, துர்க்கையை வணங்குவது பதற்றத்தை குறைக்க உதவும்.
செவ்வாய் பெயர்ச்சி மகர ராசியின் பத்தாவது வீட்டில் நிகழவுள்ளது. இது தொழில் மற்றும் சமூக கௌரவத்துடன் தொடர்புடைய வீடாகும். மகரம் செவ்வாய் கிரகத்தின் உச்ச ராசியாகும். இருப்பினும் வேலை அல்லது வியாபாரத்தில் அதிக அழுத்தம், அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகள், போட்டியில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தினருக்கும் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படலாம். பணியிடத்தில் சமநிலையை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். மூட்டு வலி, சோர்வு போன்ற பிரச்சனைகளும் நீடிக்கலாம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகள் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்துவது விளைவுகளை குறைக்க உதவும்.
மீன ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க உள்ளார். இந்த வீடு திடீர் மாற்றம், மர்மம் மற்றும் திடீர் நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில் திடீர் செலவு, நிதி இழப்பு, முதலீட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம், பதட்டம், ரத்தம் மற்றும் தசைகள் தொடர்பான நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, மனக் கசப்புக்கு வழி வகுக்கலாம். மீன ராசியின் அதிபதியாக விளங்கும் குருவும், செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்றாலும் துலாம் ராசியில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் எதிர்மறை விளைவுகள் காணப்படும்.
பரிகாரம்: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)