
இந்து புராணங்களின்படி குபேர பகவான் செல்வத்தின் கடவுளாகவும், திசைகளின் எட்டு காவலர்களில் ஒருவராகவும் (வடதிசையின் காவலராக) கருதப்படுகிறார். இவர் செல்வத்தை வழங்குவதோடு, நிதி ஒழுக்கம், தாராள மனப்பான்மை, ஆன்மீகம் பற்றையும் பக்தர்களுக்கு வழங்குகிறார். சுக்கிரன், குரு போன்ற செல்வத்துடன் தொடர்புடைய கிரகங்கள் ஆளும் ராசிகளுக்கு குபேர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பின்வரும் ஐந்து ராசிகள் குபேர பகவானின் அருளை பெறுவதற்கு சாதகமானவையாக கருதப்படுகின்றன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். சுக்கிரன், செல்வம், ஆடம்பரம் மற்றும் பொருள் வளத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே குபேர பகவானின் ஆசி இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே கிடைக்கிறது. இவர்கள் செல்வத்தை சேமிப்பதிலும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் திறன் பெற்றவர்கள். இவர்களின் பொறுமை மற்றும் உறுதியான மனப்பான்மை குபேர பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும். இவர்கள் இயற்கையாகவே செல்வத்தை மதிக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் என்பதால் குபேரனின் ஆசி பரிபூரணமாக இவர்களுக்கு கிடைக்கிறது. குபேர பகவானுக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது இவர்களின் செல்வ வளத்தை பெருக்கும். வெள்ளிக்கிழமைகளில் குபேர பகவானுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகுந்த விசேஷத்தை தரும்.
கடக ராசியின் அதிபதியாக சந்திரன் விளங்கி வருகிறார். சந்திரன் மன அமைதி, முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை வழங்கும் கிரகமாக அறியப்படுகிறார். இந்த ராசிக்காரர்கள் கூர்மையான மனம் கொண்டவர்களாகவும் திறமையான முடிவெடுப்பவர்களாகவும் விளங்குகின்றனர். இவர்கள் குபேரனின் செல்லப்பிள்ளைகளாக கருதப்படுகின்றனர். மேலும் இவர்கள் செல்வத்தை திறமையாக சேமிப்பதிலும் அதை பயன்படுத்துவதிலும் ஒழுக்கத்தை பின்பற்றுகின்றனர். எனவே இவர்களை குபேரர் மிகவும் விரும்புகிறார். இவர்களுக்கு குபேர பகவான் குறைவில்லாத செல்வத்தை அள்ளி வழங்குகிறார். குபேர யந்திரத்தை வீட்டில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபடுவது கடக ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளித் தரும்.
துலாம் ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். ரிஷப ராசிக்கு கூறியது போலவே சுக்கிரன் ஆடம்பரம், செல்வம் மற்றும் புகழுக்கு காராகரவர். எனவே துலாம் ராசிக்காரர்களும் குபேரனின் அருளைப் பெறுகின்றனர். இவர்கள் கடினமான உழைக்கும் திறன் கொண்டவர்கள். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்கள். இவர்களின் நடத்தை மற்றும் புத்திசாலித்தனம் ஆகிய குணங்களால் குபேரன் இவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார். துலாம் ராசிக்காரர்கள் மோதலை விரும்பாமல் அமைதியை கடைபிடிக்க நினைப்பவர்கள். இவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் செல்வத்தை பகிர்ந்து கொள்ளும் திறன் காரணமாக குபேர பகவான் இவர்களுக்கு செல்வத்தை அள்ளி வழங்குகிறார். தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது, வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்வது மிகுந்த பலன்களைத் தரும்.
விருச்சக ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் உறுதியான மனநிலை, ஆழ்ந்த சிந்தனை மற்றும் செல்வத்தை பாதுகாக்கும் திறன் கொண்டவர்கள். செல்வத்தை மட்டுமல்ல அதை பயன்படுத்துவதில் உள்ள ஒழுக்கத்தையும் குபேர பகவான் மதிக்கிறார். விருச்சக ராசிக்காரர்களின் இயல்பான உள்ளுணர்வு மற்றும் முதலீடுகளில் உள்ள ஸ்திரத்தன்மையை மேம்படுத்த குபேர பகவான் அவர்களுக்கு அருள் புரிகிறார். குபேர பகவானின் மந்திரங்களை உச்சரிப்பது வடக்கு திசையில் வைத்து அவரை வணங்குவது இவர்களுக்கு சிறப்பு பலன்களைத் தரும். குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைத்து “ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய” மந்திரத்தை ஜெபிப்பது மிகுந்த நன்மைகளை தரும்.
குரு பகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் குபேரனுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றாக விளங்குகின்றனர். குபேரன் இவர்களுக்கு மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செல்வ செழிப்பை வழங்குகிறார். குபேரனின் அருள் காரணமாக இவர்கள் பிறந்தது முதலே அதிர்ஷ்டசாலிகளாக விளங்குகின்றனர். இவர்கள் புகழையும் பணத்தையும் எளிதில் பெரும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். தனுசு ராசியினர் தங்கள் செல்வத்தை தானம், ஆன்மீகப் பணிகள், சமூக நலனுக்காக பயன்படுத்துவதால் குபேர பகவான் இவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குகிறார். வியாழக்கிழமைகளில் குபேரனுக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்களை தரும்.
குபேர பகவான் செல்வத்தை வழங்குவது மட்டுமல்லாமல் அதை முறையாக பயன்படுத்தும் ஒழுக்கத்தையும் மதிக்கிறார். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் நேர்முறையான முறையில் செல்வத்தைப் பெறுவதும் அதை தான, தர்மங்களுக்கு பயன்படுத்துவதும் குபேரனின் அருளை பெற்றுத் தர உதவும். குபேரன் வடக்கு திசையின் காவலராக விளங்குவதால் வீட்டின் வடக்குப் பகுதியை சுத்தமாக வைத்து, அங்கு குபேர யந்திரத்தை வைத்து பூஜிப்பது செல்வத்தை ஈர்க்க உதவும். “ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் குபேராய நமஹ” மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நன்மைகளைத் தரும். குபேர பகவானுக்கு பிடித்த பால், தேன், மஞ்சள் மற்றும் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்புகளை தரும்.
(குறிப்பு: குபேர பகவானின் ஆசி இயல்பாகவே ரிஷபம், கடகம், துலாம், விருச்சகம், தனுசு ஆகிய ராசிகளுக்கு கிடைக்கும். இந்த ராசிகள் செல்வத்துடன் தொடர்புடைய கிரகங்களான சுக்கிரன், குரு, செவ்வாய் போன்ற கிரகங்களால் ஆளப்படுகின்றன. இருப்பினும் உண்மையான பக்தி, நேர்மை ஆகியவற்றைப் பொறுத்து குபேர பகவானின் ஆசி எந்த ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். இந்த கட்டுரை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஜோதிட கருத்துக்கள் அடிப்படையிலானது மட்டுமே் இதன் நம்பகத் தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)