துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் தடைகள் விலகும். கடினமான வேலைகளையும் எளிதாக முடித்து வெற்றியைப் பெறுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானங்களுடன் தொடர்பு கொள்வதால் இந்த வாரம் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரமாக இருக்கும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வளம் பெறுகிறது. இதன் காரணமாக முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு அடுத்த தலைமுறைக்கு புண்ணியத்தை தேடுவீர்கள். குலதெய்வத்தின் அருளால் பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் மற்றும் வழக்குகள் முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் இந்த வாரம் முடிவுக்கு வரும்.
நிதி நிலைமை:
எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் நிதிநிலை கணிசமாக உயரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆடம்பரப் பொருட்களுக்காகவும், வீட்டிற்குத் தேவையான மின்னணு சாதனங்களுக்காகவும் செலவு செய்ய நேரிடலாம். தங்கம், வெள்ளி போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
வேலை மற்றும் தொழில்:
வேலையிடத்தில் நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். பணி புரியும் இடத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள், சங்கடங்கள் மறையும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்ட இருப்பவர்களின் கனவுகள் நிறைவேறும். புதிய தொழிலுக்கான நிதி உதவிகள் கிடைக்கும். படித்து முடித்து நேர்காணலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகள் இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் சற்று மாறத் தொடங்கலாம். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு இந்த வாரம் உகந்ததாக இருக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
உடல் ஆரோக்கியத்தில் சிறு அசதிகள் மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கவும். குறிப்பாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாக இருக்கும். ஞாபக மறதி, கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எழுதி பழகி படிப்பது சிறந்தது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
சந்திராஷ்டம நாட்கள்:
ஜனவரி 27 அன்று மாலை 4:45 மணி முதல் ஜனவரி 29 அன்று மாலை 6:39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மனக் குழப்பங்கள் ஏற்படலாம். விரயங்கள் அதிகமாகலாம்.
பரிகாரங்கள்:
துர்க்கை அம்மனை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது ஆடைகளை தானமாக வழங்குவது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)