
இந்து மத மரபுகளின் படி கருட புராணம் என்பது மரணத்திற்கு பின்னரான ஆன்மாவின் பயணத்தையும், ஒவ்வொரு பாவங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் விரிவாக பேசும் ஒரு முக்கிய நூலாகும். கருட புராணம் கணவன் மனைவி உறவுகளில் செய்யப்படும் துரோகங்கள், ஏமாற்றங்கள், போன்ற பாவச் செயல்களுக்கு கடுமையான நரக தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதை தெளிவாக விளக்குகிறது.
பொதுவாக காதல் அல்லது குடும்ப உறவுகளில் ஏமாற்றுபவர்களுக்கு நரகத்தில் என்ன விதமான தண்டனைகள் கிடைக்கும் என்று கருட புராணம் கூறும் கருத்துக்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கருட புராணத்தின்படி உறவுகள் என்பது நம்பிக்கை அல்லது உண்மையின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். காதலும் காதல் உறவு அல்லது திருமண உறவு என எதுவாக இருந்தாலும் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவது நம்பிக்கை துரோகமாகும் இது மகா பாவமாக கருதப்படுகிறது. தங்களது துணையிடம் உண்மையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து, அதிலிருந்து விலகிச் சென்று துரோகம் செய்வது, பிறரின் உணர்வுகளுடன் விளையாடுவது, நம்பிக்கையை உடைப்பது ஆகியவை பாவச் செயல்களாக கருட புராணம் கூறுகிறது.
அத்தகைய செயல்கள் புரிபவர்களுக்கு பின்வரும் தண்டனைகள் விதிக்கப்படும் என்று கருட புராணம் குறிப்பிடுகிறது.
கணவன்-மனைவி அல்லது காதல் உறவுகளில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றி, வஞ்சித்து வாழ்வது, தங்களது துணைக்கு துரோகம் செய்வது, சத்தியத்திற்கு மாறாக நடப்பது ஆகியவர்களுக்கு ‘அநித்தாமிஸ்ர நரகம்’ கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நரகத்தில் பாவம் செய்த ஆன்மாக்கள் கடும் இருளில் சிக்கி, பார்வை மங்கி உணர்விழந்து, மூர்ச்சையாகி விழுந்த தவிப்பார்கள். உண்மையாக வாழாமல், ஒருவருக்கொருவர் வஞ்சித்து வாழ்ந்ததற்கு தண்டனையாக அவர்கள் இந்த நரகத்தில் மீளா துயரில் ஆழ்த்தப்படுவார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.
பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள், நம்பியவர்களை வஞ்சிப்பவர்கள், பிறரின் உணர்வுகளுடன் விளையாடுபவர்கள் மற்றும் நம்பிக்கையை உடைப்பவர்களுக்கு ‘தாமிஸிர நரகம்’ கிடைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. அதாவது வாக்குறுதி கொடுத்து உண்மையாக இல்லாமல் நடப்பது போன்றவை இந்த வகை பாவங்களில் அடங்கும். இந்த நரகத்தில் பாவம் செய்த ஆன்மாக்கள் சவுக்கடிகளால் கடுமையாக தாக்கப்படுவார்கள். யம தூதர்கள் முள்ளான கட்டைகளாலும், கதைகளாலும் நையப் புடைப்பார்கள். இவர்கள் ஓய்வு என்பதே இல்லாமல் துன்புறுத்தப்படுவார்கள்.
பிறருடைய குடும்பத்தை கெடுப்பவர்கள், ஒற்றுமையாக வாழும் உறவுகளை பிரிப்பவர்கள், உறவுகளை அழிப்பவர்கள் போன்ற கொடிய செயல்கள் செய்பவர்களுக்கு ‘ரௌரவ நரகம்’ கிடைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு காதலன் காதலி உறவில் இருக்கும் பொழுது இன்னொருவருடன் உறவு கொண்டு அந்த உறவை சிதைப்பது ரௌரவ நரகத்திற்கு வழிவகுக்கும். இந்த நரகத்தில் பாவிகளை யம தூதர்கள் கூர்மையான சூலம் கொண்டு குத்தி துன்புறுத்துவார்கள். இந்த நரகத்தில் பாவிகள் தினம் தினம் கொடுமையான தண்டனைகளை அனுபவிப்பார்கள்.
ஒழுங்கீனமானவர்கள், மோக வெறி கொண்டு நியாயமற்ற, தர்மத்திற்கு புறம்பான உறவுகளைத் தேடி அலைபவர்களுக்கு ‘வஜ்ர கண்டக நரகம்’ கிடைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. காதலன் அல்லது காதலியை ஏமாற்றி மோகம் காரணமாக தவறான வழிகளில் செல்பவர்களுக்கு இந்த நரகம் கிடைக்கும். இந்த நரகத்தில் ஆன்மாக்கள் கூர்மையான முட்களை கொண்ட மரங்களை கட்டிப்பிடிக்க சொல்வது, கூர்மையான மரங்களில் அமர வைத்து கழுவேற்றம் செய்வது போன்ற கொடுமையான தண்டனைகளை அனுபவிப்பார்கள்.
கருட புராணம் குறிப்பிடும் இந்த தண்டனைகளின் நோக்கம் என்பது பழிவாங்குவது அல்ல, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். வாழ்வில் ஒருவரை ஏமாற்றுவது, துரோகம் செய்வது, நம்பிக்கையை உடைப்பது போன்றவை மோசமான பாவ செயல்களாக கருட புராணம் குறிப்பிடுகிறது. இந்த தண்டனைகள் உயிருடன் இருக்கும் போது மனிதர்கள் அறம் தவறாமலும், நியாயத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
கருட புராணமானது ஒரு பய உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது. உங்களை காதலிப்பவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவது என்பது நம்பிக்கை துரோகமாகும். கருட புராணத்தின்படி மரணத்திற்கு பின்னர் அவர்களுக்கு கடுமையான நரக வேதனைகள் கிடைக்கும். எனவே எந்த உறவாக இருந்தாலும் உண்மை, நேர்மை, விசுவாசம் மட்டுமே ஒருவரை பாவங்களிலிருந்து காத்து நல்ல கர்மாவை ஈட்ட உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)