ஜோதிட சாஸ்திரங்களில் சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். சில வார்த்தைகள் அல்லது செயல்கள் அவரை கோபப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களில் சனிபகவான் மிக முக்கிய கிரகமாவார். அவர் நீதிமான், நீதியின் கடவுள், கர்மத்தின் காவலர் மற்றும் ஒழுக்கத்தை பேணுபவர் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் ஒருவரின் கர்மத்தைப் பொறுத்து பலன்களை வழங்குவார். நல்ல கர்மத்திற்கு வெகுமதியும், தவறான கர்மத்திற்கு தண்டனையும் அளிப்பார். ஆனால் நாம் பேசும் சில வார்த்தைகள் அல்லது செயல்கள் அவரை கோபப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி பகவானின் மகிழ்விப்பதற்கு நாம் நேர்மை, பொறுமை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் சனிபகவானின் கோபப்படுத்தக்கூடிய வார்த்தைகள், செயல்கள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
25
பொய் கூறுவது, ஏமாற்றுவது
சனிபகவான் நேர்மையை மிகவும் மதிக்கிறார். பொய் சொல்வது, மற்றவர்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது அல்லது உண்மையை மறைப்பது போன்றவை அவரை கோபப்படுத்தும். உதாரணமாக தவறான செயல்களை செய்து விட்டு நான் இதை செய்யவில்லை என்று பொய் கூறுவது அல்லது மற்றவர்களை ஏமாற்றுவதற்காக புனைந்த வார்த்தைகளை பயன்படுத்துவது சனியின் கோபத்தை தூண்டலாம்.
மற்றவர்களை அவமதிக்கும், கேலி செய்யும் அல்லது குறை கூறும் வார்த்தைகள் சனிபகவானுக்கு பிடிக்காதவை. உதாரணமாக, “நீ ஒரு தோல்வி அடைந்தவன்”, “உன்னால் எதுவும் செய்ய முடியாது” போன்ற வார்த்தைகள் மற்றவர்களின் மனதை புண்படுத்துவதோடு, சனிபகவானின் நீதி உணர்வுக்கு எதிரானதாகவும் இருக்கும்.
பிறரை சபிப்பது, தீய எண்ணங்களை வெளிப்படுத்துவது அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுவது சனிபகவானுக்கு பிடிக்காது. “அவன் தோல்வியடைய வேண்டும்”, “அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்” போன்ற வார்த்தைகள் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி, சனி பகவானின் கோபத்தை தூண்டலாம்.
35
பிறரின் வெற்றிக்கு நீங்கள் பெருமை சேர்ப்பது
மற்றவர்களின் உதவியை மதிக்காமல் இருப்பது, இதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்று நன்றியின்மையை வெளிப்படுத்துவது சனியின் நீதி உணர்வுக்கு எதிராக இருக்கும். ஒருவர் தான் செய்யும் உதவியை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். உதவி செய்தது குறித்து பெருமை பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நீங்கள் செய்த உதவிக்கு மதிப்பு இருக்காது. ஏற்கனவே கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பேச்சு மேலும் கஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு பெருமை பேசி மற்றவர் மனதை புண்படுத்தும் பழக்கம் சனி பகவானுக்கு பிடிக்காது.
ஏதாவது ஒரு வெற்றி அடைந்தால் அது என்னால் தான் நடந்தது என்று சிலர் பெருமை பேசுவார்கள். உங்கள் உழைப்பு இல்லாமல் அந்த வெற்றிக்கு நீங்கள் பெருமை சேர்த்துக் கொள்வதை சனி பகவான் விரும்புவதில்லை. இதன் காரணமாக அவர் உங்களை தண்டிக்கும் அபாயமும் உள்ளது. அதேபோல் ஆணவ வார்த்தைகளை சனி பகவான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். மற்றவர்களின் உழைப்புக்கு தங்கள் பெருமை சேர்த்துக் கொள்பவர்கள் மீது சனிபகவான் கடும் கோபம் கொள்வார்.
சிலர் சுய ஒழுக்கம் இல்லாமல் திரிந்து கொண்டு தாங்கள் கடவுளுக்கு பிடித்த பிள்ளைகள் என்று கூறுவார்கள். அதை அனைவரிடமும் சொல்லி நம்ப வைப்பார்கள். இதுபோன்ற வார்த்தைகளை சனிபகவான் ஒருபோதும் விரும்புவதில்லை. கடவுளின் அருளைப் பெற ஒருவர் தகுதியும், நல்லொழுக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
“என்ன தவறு செய்தாலும் கடவுள் என்னை மன்னிப்பார்”, “மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, அவற்றை சரி செய்ய வேண்டியது கடவுளின் வேலை” என்று சிலர் பொறுப்பில்லாமல் பேசிக்கொண்டு திரிவார்கள். அவர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் கடவுள் மன்னிப்பார் என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். “எந்தக் கடவுள் வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்ற அகம்பாவத்துடன் சிலர் இருப்பார்கள். இதுபோன்ற வார்த்தைகள் சனிபகவானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற வார்த்தைகளை தவறுதலாக கூட பேசுதல் கூடாது.
55
சனி பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்கள்
சனி மகா திசை 19 வருடங்கள் அல்லது சனி அந்தர திசை காலத்தில் ஒருவர் மேற்கூறிய வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ செய்தால் வாழ்க்கையில் தடங்கல், மன அழுத்தம், நிதி நெருக்கடி, உறவில் விரிசல்கள் ஆகியவை ஏற்படலாம். ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகும் பொழுது குறிப்பாக ஜன்ம ராசி, 4, 7, 10 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது அவரை கோபப்படுத்துவது சவால்களை அதிகரிக்கலாம். சனிபகவான் ஒருவரின் கடந்த கால கர்ம வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பலன்களை வழங்குவார் எதிர்மறையான வார்த்தைகள், செயல்கள் கர்ம சுமைகளை அதிகரிக்கலாம்.
சனிபகவானை கோபப்படுத்தாமல் இருக்கவும் அவரது அருளைப் பெறவும் ஜோதிட சாஸ்திரம் சில வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. எப்போதும் உண்மையை பேசுவது, மற்றவர்களை மதிப்பது, பணிவாக இருப்பது, சோம்பேறித்தனத்தை தவிர்த்து, உழைப்பது, பொறுப்பை ஏற்றுக் கொள்வது, ஏழைகளுக்கு உதவுவது, சனிக்கிழமைகளில் எள், எண்ணெய், கருப்புத் துணி, கடலை ஆகியவற்றை தானம் செய்வது, சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, ஹனுமன் வழிபாடு செய்வது, சனி மந்திரங்களை ஜெபிப்பது, மற்றவர்களை இழிவு படுத்தாமல் இருப்பது, நேர்மறையான உற்சாகமூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவை சனி பகவானை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் சில வழிமுறைகள் ஆகும்.
(குறிப்பு: நம் பள்ளிகளில் சில கண்டிப்பான ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு கண்டிப்புடன் கூடிய ஒழுக்கத்தை கற்றுத் தருவார்கள். சனிபகவானும் அதுபோல கண்டிப்பான ஒரு ஆசிரியர் தான். அவர் நியாயமானவர். அவரை கோபப்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயல்களை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நமக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவார். இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)